1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By லெனின் அகத்தியநாடன்
Last Updated : வெள்ளி, 31 ஜூலை 2015 (13:18 IST)

”நீதி வழங்கும் முறையில் பாகுபாடு காட்டக்கூடாது” - யாகூப் மேமன் தூக்கு குறித்து சீத்தாராம் யெச்சூரி

மும்பை குண்டுவெடிப்பு வழக்கில் யாகூப் மேமன் தூக்கிலிடப்பட்டது நீதிமுறை சீர்குலைவாகும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச்செயலாளர் சீத்தாராம் யெச்சூரி கண்டனம் தெரிவித்துள்ளார்.
 
புதுதில்லியில் வியாழக்கிழமையன்று பத்திரிகையாளர்களிடம் பேசிய யெச்சூரி, “மும்பை குண்டு வெடிப்புச் சம்பவத்திற்கு காரணம் மதவாதக் கலவரங்களே ஆகும். எனவே 1992இல் நடைபெற்ற மதக்கலவரங்களுக்கு காரணமானவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும். யாகூப் மேமன் வழக்கில் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
 
ஆனால் இதே தீவிரத்தை மற்ற வழக்குகளிலும் காண்பித்து நாட்டின் ஒற்றுமை மற்றும் இறையாண்மையைப் பராமரிக்க வேண்டும். 1993இல் மும்பையில் நடந்த மதக்கலவரங்கள் மற்றும் தொடர் குண்டு வெடிப்புகளை புலனாய்வு செய்த நீதிபதி ஸ்ரீகிருஷ்ணா கமிட்டி அறிக்கையில், குண்டுவெடிப்புகளுக்கு பாபர் மசூதி இடிப்புக்குப் பின்னர் நடைபெற்ற மதக்கலவரங்களே காரணம் என்று சுட்டிக் காட்டப்பட்டுள்ளது.
 
அந்த அறிக்கையில், மேமன் குடும்பம் மதக்கலவரங்களில் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. வெளிநாட்டு சக்திகள் அவர்களை பயன்படுத்தி குண்டு வெடிப்பை மேற்கொண்டனர் என்றும் கூறப்பட்டுள்ளது.
 
மும்பை குண்டு வெடிப்பின் காரணமாகவே யாகூப் தூக்கிலிடப்பட்டு உள்ளார். அப்படியானால் மும்பையிலும் பிற இடங்களிலும் நடந்த மதக்கலவரங்களுக்கு பொறுப்பானவர்கள் மீது என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது?
 
 என்பது மட்டுமின்றி, பாகுபாடின்றி தோற்றமளிப்பதும் நீதித்துறையின் மீது மக்களுக்கு நம்பிக்கையை தக்க வைப்பது அவசியமாகும். 
 
மாலேகான் அல்லது சம்ஜவுதா எக்ஸ்பிரஸ் குண்டு வெடிப்பில் அல்லது முன்னாள் குஜராத் அமைச்சர் மாயா கோட்னானி மீதான வழக்கு (2002 குஜராத் கலவரங்களில் குற்றம் சாட்டப்பட்டவர்) போன்ற இந்துத்துவா பயங்கரவாத வழக்குகளில் அரசு தாமதமாகவும் மெத்தனமாகவும் நடந்து கொள்கிறது.
 
இது நீதி வழங்கும் முறையல்ல; நீதி என்பது அனைவருக்கும் சமமாக இருக்க வேண்டும். நீங்கள் நீதியை ஒரு பக்கத்திற்கு மட்டும் கொண்டு வந்துள்ளீர்கள். இன்னொரு பக்கம் புறக்கணிக்கப்படக் கூடாது, நீதி வழங்கும் முறை எந்தவித பாரபட்சத்திற்கும் அப்பாற்பட்டு இருக்க வேண்டும்” என்று கூறியுள்ளார்.