செவ்வாய், 23 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By வீரமணி பன்னீர்செல்வம்
Last Modified: செவ்வாய், 28 ஜூலை 2015 (15:17 IST)

யாகூப் மேமன் மனுவை பேரமர்வுக்கு மாற்ற நீதிபதிகள் பரிந்துரை

தூக்கு தண்டனைக்கு தடை கோரி மும்பை தொடர் குண்டுவெடிப்பு குற்றவாளி யாகூப் மேமன் தாக்கல் செய்த மனுவை பேரமர்வுக்கு மாற்ற பரிந்துரைக்கப்பட்டுள்ளது.
 

 
கடந்த 1993 ஆம் ஆண்டு நடந்த மும்பை தொடர் குண்டுவெடிப்பு வழக்கில் தொடர்புடைய யாகூப் மேமனுக்கு தூக்கு தண்டனை விதிக்கப்பட்டு, அவரது தூக்கு தண்டனையை உச்ச நீதிமன்றமும் உறுதி செய்தது.
 
இதையடுத்து, நாக்பூர் மத்திய சிறையில் வரும் 30 ஆம் தேதி அவர் தூக்கிலிடப்பட உள்ளார். இந்நிலையில், யாகூப் மேமன் தனது தூக்கு தண்டனைக்கு தடை விதிக்கக் கோரி உச்ச நீதிமன்றத்தில் புதிதாக ஒரு மனு தாக்கல் செய்தார்.
 
அந்த மனு இன்று விசாரணைக்கு வந்தது. மனுவை விசாரித்த நீதிபதிகள் ஏ.ஆர்.தாவே, குரியன் ஜோசப் ஆகியோர் மாறுபட்ட நிலைப்பாட்டை எடுத்ததுடன் மனுவை பேரமர்வுக்கு பரிந்துரைத்தனர்.
 
யாகூப் மேமன் மனுவை விசாரித்த நீதிபதி ஏ.ஆர்.தாவே, ஜூலை 30ல் தூக்கு தண்டனை நிறைவேற்ற தடை விதிக்க மறுத்துவிட்டார். யாகூப் மேமன் வழக்கில் மகாராஷ்டிரா ஆளுநரே இறுதி முடிவு எடுக்கட்டும் என்றார்.
 
ஆனால், மற்றொரு நீதிபதி குரியன், ஜூலை 30ல் தூக்கு தண்டனை நிறைவேற்றப்படக் கூடாது என்றார். இதனையடுத்து, கூட்டாக வெளியிடப்பட்ட உத்தரவில் வழக்கு தலைமை நீதிபதிக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளது. அவர் வழக்கை விசாரித்துவிட்டு பேரமர்வை அமைப்பார் எனத் தெரிகிறது.