வியாழன், 25 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By லெனின் அகத்தியநாடன்
Last Modified: புதன், 24 ஆகஸ்ட் 2016 (11:37 IST)

நான் தேச விரோதி அல்ல; மன்னிப்பு கேட்க மாட்டேன் - நடிகை ரம்யா உறுதி

பாகிஸ்தான் மக்களை புகழ்ந்து பேசியதற்காக, ஒருபோதும் மன்னிப்பு கேட்க மாட்டேன் என்றுகாங்கிரஸ் செய்தித் தொடர்பாளரும், நடிகையுமான ரம்யா கூறியுள்ளார்.
 

 
பாஜக கூட்டமொன்றில் பேசிய, மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் மனோகர் பாரிக்கர், ‘பாகிஸ்தானுக்குச் செல்வதும் நரகத்திற்குச் செல்வதும் ஒன்றுதான்’ என்று கடுமையான விமர்சனத்தை வைத்தார். இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி இருந்தது.
 
இந்நிலையில், கன்னட திரைப்பட நடிகையும், காங்கிரஸ் முன்னாள் எம்.பி.யுமான ரம்யா, கடந்த சில நாட்களுக்கு முன்பு மாண்டியாவில் செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்தார்.
 
அதில், ‘‘நான் பாகிஸ்தானுக்கு சுற்றுலா சென்று இருந்தேன்; அந்நாடு நரகம் அல்ல; அதுவும் நல்ல நாடுதான்; மத்திய அமைச்சர் மனோகர் பாரிக்கர் கூறியிருப்பது போல் அது நரக நாடுகிடையாது: அவரது கருத்து தவறானது; பாகிஸ்தான் மக்களும் நம்மை போன்றவர்கள்தான்’’ என்று ரம்யா கூறினார்.
 
இதனையடுத்து, சங்-பரிவாரத்தைச் சேர்ந்த வழக்கறிஞர் கே. விட்டாலா கவுடா என்பவர், சோமவார்பேட்டை நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில், ரம்யா மீது தேசத்துரோகம் உள்ளிட்ட பிரிவுகளில் வழக்கு பதிவு செய்ய வேண்டும் என்று வழக்கு தொடர்ந்தார்.
 
பாகிஸ்தானை பாராட்டிப் பேசியதன் மூலம், நடிகை ரம்யா, இந்திய நாட்டை அவமதித்து விட்டார், இந்திய மக்கள் மத்தியில் கோபாவேசத்தை தூண்டி விட்டுள்ளார் என்றும் கவுடா தனது மனுவில் குறிப்பிட்டிருந்தார்.
 
இந்த மனுவை விசாரணைக்கு ஏற்றுக்கொண்ட நீதிபதி ஷியாம் பிரகாஷ், விசாரணையை ஆகஸ்ட் 27-ஆம் தேதிக்கு ஒத்திவைத்துள்ளார்.
 
இதனிடையே தன்மீதான தேசத்துரோக குற்றச்சாட்டு தொடர்பாக பதிலளித்துள்ள ரம்யா, ‘பாகிஸ்தான் மக்களும் நம்மை போன்றவர்கள் தான் என்று தனது முந்தைய கருத்தை உறுதிப்படுத்தி இருப்பதுடன், தான் எந்த தவறும் செய்யவில்லை என்றும், எனவே, மன்னிப்பு கேட்க போவதும் இல்லை’ என்று அதிரடியாக கூறியுள்ளார்.
 
மேலும், ‘எனது கருத்தை வெளிப்படுத்த எனக்கு உரிமை உள்ளது; ஜனநாயகம் ஒவ்வொருவருக்கும் அந்த உரிமையை வழங்குகிறது; எனவே, நான் தேச விரோதி அல்ல; தான் தேசியவாதிதான். ஆனால், பாஜக கருத்துச்சுதந்திரத்தை முடக்கப் பார்க்கிறது; தேசத் துரோக சட்டப் பிரிவை தவறாக பயன்படுத்த முயல்கிறது’ என்று குற்றம் சாட்டியுள்ளார்.