செவ்வாய், 23 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By வீரமணி பன்னீர்செல்வம்
Last Modified: புதன், 4 மார்ச் 2015 (15:18 IST)

டெல்லி மாணவி பலாத்காரம்: குற்றவாளி பேட்டிக்கு எதிராக நடவடிக்கை எடுக்க நாடாளுமன்றத்தில் பெண் எம்.பி.க்கள் வலியுறுத்தல்

டெல்லியில் மருத்துவ மாணவி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு, கொலை செய்யப்பட்ட வழக்கில் தூக்கு தண்டனை விதிக்கப்பட்ட குற்றவாளியிடம் பேட்டி எடுக்கப்பட்டது தொடர்பாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மாநிலங்களவையில் பெண் எம்.பி.க்கள் வலியுறுத்தியுள்ளனர்.
 
மாநிலங்களவையில் சமாஜ்வாடி எம்.பி. ஜெயா பச்சன் உள்பட அனைத்து பெண் எம்.பி.க்களும் அவையில் இருந்தனர். திகார் சிறையில் தூக்கு தண்டனை குற்றவாளியிடம் பேட்டி எடுக்க அனுமதி அளிக்கப்பட்டது தொடர்பாக அரசின் பதில் அதிருப்தி அளிக்கிறது என்று அவர்கள் மையப்பகுதிக்கு வந்து கூறினார். அவர்களுடன் மற்ற ஆண் எம்.பி.க்களும் கலந்து கொண்டனர். இதனையடுத்து மாநிலங்களவையை அவை தலைவர் குரியன் 15 நிமிடங்கள் ஒத்திவைத்தார்.
 
ஐக்கிய ஜனதா தளம் கட்சியின் உறுப்பினர் கே.சி.தியாகி முன்னதாக அவையில் நோட்டீஸ் வழங்கினார். இப்பிரச்சனையை எழுப்ப அவை விதி 267 படி அவை நடவடிக்கையை ஒத்திவைக்க கோரி நோட்டீஸ் வழங்கினார்.
 
"பேட்டி எடுக்க அனுமதி அளித்த, சிறை டி.ஜி.பி மற்றும் அதிகாரிகளுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்." இதுதொடர்பாக சிறப்பு நீதிமன்றம் அமைத்து உடனடியாக குற்றவாளியை தூக்கிலிட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று குறிப்பிடப்பட்டது. ஆனால் அவை தலைவர் குரியன் நோட்டீஸை ஏற்க மறுத்துவிட்டு, பேட்டி எடுக்க அனுமதி அளிக்கப்பட்டது ஏற்றுக் கொள்ள முடியாதது. இது முக்கியமான பிரச்சனை என்று கூறிவிட்டார்.
 
கொடூரமான குற்றத்தை செய்துவிட்டு குற்றவாளி அதனை நியாப்படுத்துகிறார் என்று கூறிய குரியன், அரசு இதுதொடர்பாக அவையில் அறிக்கை அளிக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.
 
நாடாளுமன்ற விவகாரத்துறை இணை அமைச்சர் முக்தார் அப்பாஸ் நக்வி, மத்திய உள்துறை அமைச்சகம் இவ்விவகாரத்தை கருத்தில் எடுத்துக் கொண்டுள்ளது. குற்றவாளிக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்கப்படும். யாரையும் தப்பிக்க விடப்போவது இல்லை என்று கூறினார். பதிலில் திருப்தி அடையாத சமாஜ்வாடி கட்சியின் உறுப்பினர் ஜெயா பச்சன் அவையில் தொடர்ந்து தனது எதிர்ப்பை பதிவு செய்தார்.