வெள்ளி, 29 மார்ச் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By லெனின் அகத்தியநாடன்
Last Modified: செவ்வாய், 8 மார்ச் 2016 (13:42 IST)

கைது செய்யப்படுவாரா விஜய் மல்லையா? - 13 வங்கிகள் தொடர்ந்த வழக்கால் சிக்கல்

பிரபல மதுபான நிறுவன தொழிலதிபர் விஜய் மல்லையாவிற்கு எதிராக அமலாக்கப்பிரிவு பணமோசடி வழக்குப் பதிவு செய்துள்ளது. இதனிடையே, பாரத ஸ்டேட் வங்கி உள்ளிட்ட 13 வங்கிகள் தொடர்ந்த வழக்கில் தீர்ப்பு வெளியானால் அவர் கைது செய்யப்படலாம் என்ற நிலை எழுந்துள்ளது.
 

 
பிரபல தொழிலதிபர் விஜய் மல்லையாவிற்கு சொந்தமான மதுபான தொழிற்சாலைகள், கிங்ஃபிஷர் விமான நிறுவனம் உள்ளிட்ட பல்வேறு தொழில் நிறுவனங்கள் உள்ளன. இந்த நிறுவனங்களின் பெயரில் பல்வேறு வங்கிகளில் ரூ.7800 கோடி கடன் பெற்று அதனை திருப்பி செலுத்தாமல் மக்களின் பணத்தை விழுங்கிட முயன்றார்.
 
இதுகுறித்து விஜய் மல்லையா மற்றும் அவரது தொழில் நிறுவனங்கள் மீதும் பல்வேறு புகார்கள் எழுந்தன. இதற்கிடையே கடந்த 2012இல் கடன் பிரச்சனையால் கிங்ஃபிஷர் விமான நிறுவனம் தனது சேவையை நிறுத்திவிட்டது. இதற்கிடையே பொதுத்துறை வங்கிகளில் பெற்ற கடனை திரும்பிச் செலுத்த முடியாது என ஏய்த்து வந்தார்.
 
இந்நிலையில், இந்திய தொழில் வளர்ச்சி வங்கியிடம் (ஐடிபிஐ) பெற்ற ரூ.900 கோடி கடனை திருப்பிச் செலுத்தவில்லை என்று புகார் அளிக்கப்பட்டது. இதுதொடர்பான புகாரின் பேரில் கிங்ஃபிஷர் விமான நிறுவனத்தின் இயக்குநரான விஜய் மல்லையா மீதும், இந்நிறுவனத்தின் தலைமை நிதி அதிகாரி ஏ.ரகுநாதன் மற்றும் ஐடிபிஐ வங்கியின் அதிகாரிகள் மீதும் கடந்தாண்டு சிபிஐ பணமோசடி வழக்கினை பதிவு செய்தது.
 
இந்த எஃப்ஐஆரை அடிப்படையாகக் கொண்டு பணமோசடி தடுப்புச் சட்டத்தின்படி சமீபத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இதற்கிடையே மல்லையாவிற்கு எதிராக அமலாக்கப்பிரிவு வழக்குப் பதிவு செய்துள்ளது.
 
வரம்பு மீறி கடன் கொடுக்க காரணமாக இருந்த அதிகாரிகள் மீதான விசாரணையும் நடைபெறவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்நிலையில், பல்வேறு வங்கிகளில் ஆயிரக்கணக்கான கோடி ரூபாய் கடன் பெற்று திருப்பி செலுத்தாத விவகாரத்தில் பாரத் ஸ்டேட் வங்கி மற்றும் பஞ்சாப் நேசனல் வங்கியும், விஜய் மல்லையா வேண்டுமென்றே கடனை திருப்பி செலுத்தாதவர் என அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளன.
 
மேலும் உள்நாடு மற்றும் வெளிநாடுகளில் பதுக்கி வைத்திருக்கும் அவரது சொத்துக்களை வெளிப்படையாக அறிவிக்க வேண்டும். அவற்றை பறிமுதல் செய்வதோடுஅவரை கைது செய்ய வேண்டுமெனவும் வலியுறுத்தியுள்ளன.
 
இந்நிலையில், விஜய் மல்லையா வெளிநாட்டிற்கு தப்பி பிரிட்டனில் குடியேற உள்ளதாக தகவல்கள் வெளிவந்த நிலையில், அவர் வெளிநாட்டிற்கு தப்பித்துச் சென்றுவிடாத வகையில் அவரது பாஸ்போர்ட் முடக்கப்பட வேண்டும் எனவும் கைது செய்து சிறையில் அடைக்க வேண்டுமெனவும் பாரதஸ்டேட் வங்கி தனது மேல்முறையீட்டு மனுவில் குறிப்பிட்டுள்ளது.
 
இதற்கிடையே விஜய் மல்லையாவின் வங்கி கடன் பாக்கி வழக்கில் பாரத ஸ்டேட் வங்கி தொடர்ந்த வழக்கில் திங்களன்று பெங்களூர் தீர்ப்பாயம் தீர்ப்பு வழங்கும் என எதிர்பார்க்கப்பட்டது.
 
இந்த பின்னணியில் நான் தலைமறைவு குற்றவாளி இல்லை. நான் ஓடி ஒழிய மாட்டேன். என் சொத்துக்களை விற்றாவது கடனை அடைப்பேன் என விஜய் மல்லையா கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.