வெள்ளி, 29 மார்ச் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By லெனின் அகத்தியநாடன்
Last Modified: திங்கள், 3 ஆகஸ்ட் 2015 (12:44 IST)

நாடாளுமன்றம் ஏன் முடங்குகிறது? - சீத்தாராம் யெச்சூரி விளக்கம்

நாடாளுமன்றம் சுமூகமாக நடக்காமல் ஏன் முடங்குகிறது என்பது குறித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அகில இந்திய பொதுச் செயலாளர் சீத்தாரம் யெச்சூரி விளக்கம் தெரிவித்துள்ளார்.
 
இது குறித்து சீத்தாரம் யெச்சூரி கூறுகையில், “மாபெரும் ஊழல் குற்றச்சாட்டுக்கள் குறித்து நாடாளுமன்றம் ஆய்வுக்கு உட்படுத்துவதிலிருந்து தப்பிக்கும் நோக்கத்துடனேயே, நாடாளுமன்றம் நடைபெறாது அமளி நடைபெறுவதை பாஜக அரசாங்கம் ஒரு சாக்காகப் பயன்படுத்திக் கொண்டிருக்கிறது.
 
லலித்மோடி ஊழலிலும், மத்தியப்பிரதேசத்தின் வியாபம் ஊழலிலும் சமீபத்தில் வெளியாகியிருக்கும் சங்கதிகளாகும். மகாராஷ்ட்டிராவில் நடைபெற்றுள்ள ஊழல்களில் இருபாஜக அமைச்சர்கள் சம்பந்தப் பட்டிருப்பதும், சட்டீஸ்கரில் உள்ளபாஜக அரசாங்கம் பொது விநியோக முறை சம்பந்தப்பட்ட ஊழலில் சிக்கிக்கொண்டிருப்பதும் இவர்களின் யோக்கியதை என்ன என்பதை தோலுரித்துக்காட்டி விட்டன.
 
ஐபிஎல் கிரிக்கெட்டில் மோசடி மன்னனாகத் திகழ்ந்த லலித் மோடி, தற்சமயம் இந்தியச் சட்டங்களுக்கு அஞ்சி வெளிநாடுகளில் தஞ்சம் அடைந்திருக்கிறார். அவரைப் பாதுகாப்பதற்காக, மத்திய அயல் விவகாரங்கள் துறை அமைச்சரும், ராஜஸ்தான் முதல்வரும் தங்கள் அதிகாரங்களை துஷ்பிரயோகம் செய்திருக்கின்றனர்.
 
இவர்களின் பரிந்துரைகள் காரணமாகத்தான், இந்தியச் சட்டங்களின் அதிகார வரம்பெல்லையை மீறி, லலித் மோடி வெளிநாடுகளில் தங்கி இருக்க முடிகிறது என்பதே குற்றச்சாட்டாகும். நம் நாட்டின் சட்டங்களுக்குப் பயந்து தப்பி வெளிநாட்டில் பதுங்கியுள்ள ஒருவருக்கு ஒரு வெளிநாட்டின் (இங்கிலாந்தின்) சட்டப்பூர்வமான பயண ஆவணங்கள் கிடைக்கப்பெற இவர்கள் வசதி செய்து தந்திருக்கிறார்கள் என்பதே குற்றச்சாட்டாகும்.
 
நாடாளுமன்றம் ஸ்தம்பித்திருப்பதற்கு மற்றுமொரு காரணம், வியாபம் ஊழலில் மத்தியப் பிரதேச முதல்வர் மீதான தீவிரமான குற்றச்சாட்டுக்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கையுமாகும்.
 
வியாபம் ஊழல், குற்றங்களும், ஊழலும் எந்த அளவிற்கு மிகவும் கொடூரமான முறையில் கைகோர்த்திருக்கின்றன என்பதைப் பிரதிநிதித்துவப்படுத்திக் கொண்டிருக்கிறது. இதில் சம்பந்தப்பட்ட பலர், இம்மாநிலத்திற்கும் அப்பால் தங்கள் உயிரை பலிகொடுத்திருக்கின்றனர்” என்று கூறியுள்ளார்.