வியாழன், 25 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Suresh
Last Updated : வெள்ளி, 17 ஜூலை 2015 (07:44 IST)

ஸ்கைப், வாட்ஸ்அப், முதலியவற்றின் இலவச அழைப்புகளை முறைப்படுத்த திட்டம்

வாட்ஸ்அப், ஸ்கைப், வைபர் உள்ளிட்ட செயலிகளில் வழங்கப்படும் இலவச அழைப்பு சேவையை முறைப்படுத்த மத்திய தொலைத் தொடர்புத் துறை திட்டமிட்டுள்ளது.
 
இணைய சமநிலையை சீர்குலைக்கும்வகையில், சில தொலைத்தொடர்பு சேவை நிறுவனங்கள் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் ஓர் அறிவிப்பை வெளியிட்டன.
 
தங்களுக்கு தனியாக கட்டணம் செலுத்தும் நிறுவனங்களின் இணைய பக்கங்களை மட்டும் முன்னுரிமை கொடுத்து அதிவேக சேவையுடன் அளிக்க இருப்பதாக அறிவித்தன.
 
இதனால், அத்தகைய குறிப்பிட்ட நிறுவனங்களின் இணைய பக்கங்களை பார்க்க இணையதள ஆர்வலர்கள் தனியாக கட்டணம் செலுத்த வேண்டியநிலை ஏற்படும்.
 
ஏர்டெல் நிறுவனம், ‘ஏர்டெல் ஜீரோ‘ என்ற திட்டத்தை அறிவித்தது. தங்களிடம் பணம் செலுத்தி அத்திட்டத்தில் சேரும் நிறுவனங்களின் இணைய பக்கங்களை இலவசமாக பார்க்க அனுமதிப்பதாக கூறியது.
 
அதையடுத்து, இணைய சமநிலை கொள்கை, நாடு முழுவதும் பெரும் விவாதத்தை உண்டாக்கியது. இணைய சமநிலைக்கு ஆதரவாக அரசியல் தலைவர்கள் பலர் குரல் கொடுத்தனர்.
 
அதைத் தொடர்ந்து, இணைய சமநிலை கொள்கை பற்றி ஆராய மத்திய தொலைத்தொடர்புத்துறை ஆலோசகர் ஏ.கே.பார்கவா தலைமையில் ஏ.கே.மிட்டல், வி.உமாசங்கர், சசிரஞ்சன் குமார், நரேந்திர நாத், ஆர்.எம்.அகர்வால் ஆகியோர் அடங்கிய குழுவை மத்திய அரசு அமைததது.
 
அந்தக் குழு, தனது இறுதி அறிக்கையை தொலைத்தொடர்புத்துறை இணைய தளத்தில் வெளியிட்டது. அதில், இணைய சமநிலை கொள்கையை கடைபிடிக்க உறுதி அளித்துள்ளது.
 
இது குறித்து அந்த குழு கூறியிருப்பதாவது:-
 
இணைய தளங்களில், அதை பயன்படுத்துபவர்களின் உரிமைகள் உறுதி செய்யப்பட வேண்டும். சட்டப்பூர்வமான எந்த விஷயங்களையும் பார்க்கவோ, அனுப்பவோ, பெறவோ, வெளியிடவோ தொலைத்தொடர்பு சேவை நிறுவனங்களும், இணையதள சேவை நிறுவனங்களும் எந்த கட்டுப்பாடும் விதிக்கக்கூடாது.
 
செல்போன் டேட்டா கட்டணம் இல்லாமல், சில குறிப்பிட்ட இணைய பக்கங்களை பார்க்க அனுமதிக்கும் பேஸ்புக் இன்டர்நெட். ஓஆர்ஜி திட்டம், இணைய சமநிலைக்கு எதிரானது.
 
அதை யாரும் ஊக்குவிக்கக்கூடாது. அதேபோன்று அறிவிக்கப்பட்டுள்ள ‘ஏர்டெல் ஜீரோ‘ திட்டம், தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையத்தின் (டிராய்) ஒப்புதலுடன் நடத்தப்பட வேண்டும்.
 
ஸ்கைப், வாட்ஸ்அப், வைபர், பேஸ்புக் மெசேஞ்சர் போன்ற இணையவழி டெலிபோன் அழைப்புகள் ஊக்குவிக்கப்பட வேண்டும். அதே சமயத்தில், தொலைத்தொடர்பு சேவை நிறுவனங்களைப் போல, அவையும் தேச பாதுகாப்பு விதிமுறைகளுக்கு உட்படுத்தப்பட வேண்டும். தேச பாதுகாப்புதான், எல்லாவற்றையும் விட முதன்மையானது.
 
மேலும், சாதாரண செல்போன் அழைப்பு கட்டணம் 50 காசாக இருக்கும்போது, இணையவழி அழைப்புக் கட்டணம் வெறும் 4 காசாக உள்ளது.
 
இந்த ஏற்றத்தாழ்வால், தங்களது வருவாய் பாதிக்கப்படுவதாக தொலைத்தொடர்பு சேவை நிறுவனங்கள் முறையிட்டுள்ளன.
 
எனவே, செல்போன் அழைப்பு கட்டணங்களும், இணையவழி அழைப்புக் கட்டணங்களும் ஒரே சீராக இருக்கும்வகையில் ஒழுங்குபடுத்தப்பட வேண்டும். இவ்வாறு அந்த குழு கூறியுள்ளது.
 
இந்நிலையில், தங்களது பரிந்துரைகள் பற்றி அடுத்த மாதம் 15 ஆம் தேதிவரை பொதுமக்கள் கருத்து தெரிவிக்கலாம் என்றும் அந்த குழு தெரிவித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.