வியாழன், 25 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By வீரமணி பன்னீர்செல்வம்
Last Modified: வெள்ளி, 12 செப்டம்பர் 2014 (17:25 IST)

பிர்லா மீதான வழக்கை முடிப்பதில் சிபிஐ அவசரம் காட்டுவது ஏன்? - நீதிமன்றம் கேள்வி

நிலக்கரி சுரங்க ஒதுக்கீடு வழக்கில் தொழிலதிபர் குமார மங்கலம் பிர்லா மீதான வழக்கை அவசரமாக முடிக்க வேண்டிய அவசியம் என்ன என்று சிபிஐ-யிடம் சிறப்பு நீதிமன்றம் சரமாரிக் கேள்விகளை எழுப்பியுள்ளது.
 
முன்னதாக குமார மங்கலம் பிர்லா மற்றும் சிலர் மீது சிபிஐ முதல் தகவல் அறிக்கை பதிவு செய்திருந்தது. ஆனால் “ஏன் இப்போது அவசரமாக அதனை முடிக்க வேண்டிய அவசியம் என்ன?” என்று விசாரணை அதிகாரியிடம் சிபிஐ நீதிமன்ற நீதிபதி பரத் பராஷர் கேள்வி எழுப்பினார்.
 
பிர்லா நிறுவனத்திற்கு சொந்தமான ஹிண்டால்கோ நிறுவனத்தின் நிலக்கரி சுரங்க ஒதுக்கீடு வழங்குமாறு கோரிய மனு குறித்து விவாதித்த ஸ்க்ரீனிங் கமிட்டியின் கூட்ட நடைமுறை விவரங்கள் அடங்கிய ‘மினிட்ஸ்’ காணாமல் போய் விட்டது என்று சிபிஐ விசாரணை அதிகாரி சிறப்பு நீதிமன்றத்தில் தெரிவித்ததும் பலத்த கேள்விகளுக்கு இடம் வகுத்தது.
 
ஸ்க்ரீனிங் கமிட்டி கூட்டத்தின் மினிட்ஸ் தொலைந்தது குறித்த அறிக்கை ஏதுமுள்ளதா? என்று கேட்ட நீதிபதி அவ்வாறான எந்த வித அறிக்கையும் நீதிமன்றத்தின் பார்வைக்குக் கொண்டு வரப்படவில்லையே என்றார்.
 
தொடர்ந்து கேள்விகளுக்கு பதில் அளிக்க முடியாமல் சிபிஐ விசாரணை அதிகாரி திணற, மேல் அதிகாரியை நீதிபதிகள் அழைத்தனர்.
 
மேலும், நீதிபதிகள் கேள்விக்கணைகளைத் தொடுத்தபோது, “எந்த அடிப்படையில் பிர்லா மீதான் வழக்கை முடிவுக்குக் கொண்டு வந்தீர்கள்? எந்த மாதிரியான விசாரணைகளை நீங்கள் மேற்கொண்டீர்கள். விசாரணை மேற்பார்வை அதிகாரி என்ன செய்து கொண்டிருந்தார்? போலீஸ் கோப்புகளைக் கொண்டு வரவும், இப்போதே விசாரணை மேலதிகாரியை நீதிமன்றத்திற்கு அழைக்கவும்” நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
 
அத்துடன், விளங்காத தெளிவற்ற கோப்புகளை சிபிஐ தங்கள் முன்னால் வைத்துள்ளதையும் நீதிபதி கண்டித்தார்: “நீதிமன்றத்தில் விளங்காத, தெளிவற்ற ஆவணங்களை சமர்ப்பித்துள்ளனர், என்னால் இந்த ஆவணங்களை படிக்க முடியவில்லை” என்றார்.
 
ஆகஸ்ட் 28, 2014-இல் சிபிஐ பிர்லா மற்றும் முன்னாள் நிலக்கரிச் செயலர் பரக் மற்றும் சிலர் மீதான வழக்கை முடித்து கொள்வதான அறிக்கையை சிறப்பு நீதிமன்றத்தில் சமர்ப்பித்திருந்தனர். அதன் மீதான விசாரணையில்தான் இன்று நீதிபதி சரமாரிக் கேள்விகளை எழுப்பியுள்ளார்.