1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Modified: செவ்வாய், 30 ஜூன் 2015 (05:45 IST)

மூத்த பா.ஜ.க. தலைவர் மீது காங்கிரஸ் கட்சி புகார்

ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள அரசாங்கத்திற்கு சொந்தமான தோல்பூர் அரண்மனையை உல்லாச விடுதியாக மாற்றியமைத்து, அதிலிருந்து மாநில முதல்வர் வசுந்தரா ராஜே, முன்னாள் ஐபிஎல் ஆணையர் லலித் மோடி உள்ளிட்டோர் வருமானம் ஈட்டி வருவதாக காங்கிரஸ் கட்சி குற்றம் சாட்டியுள்ளது.

காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரான ஜெய்ராம் ரமேஷ் இது குறித்து செய்தியாளர்களிடம் பேசியபோது, 1954 முதல் 2010ஆம் ஆண்டு வரையிலான காலக்கட்டத்தில், இந்த தோல்பூர் அரண்மனை ஒரு அரசு சொத்து என ஆறு முறை அறிவிக்கப்பட்டுள்ளதாக குறிப்பிட்டார்.

வசுந்தரா ராஜே, அவரது மகனான துஷ்யந்த் சிங், துஷ்யந்த் சிங்கின் மனைவியான நிகாரைக்கா சிங் மற்றும் லலித் மோடி ஆகியோருக்கு சொந்தமான நியந் பிரைவேட் லிமிடெட் என்கிற நிறுவனம் மூலமாக தோல்பூர் அரண்மனையை, 100 கோடி ரூபாய் செலவழித்து உல்லாச விடுதியாக மாற்றியதாகவும் ஜெய்ராம் ரமேஷ் குற்றம்சாட்டினார்.

இந்த நிறுவனம், தோல்பூர் அரண்மனையின் மூலம் வருமானம் ஈட்டி வருவதாகவும் ஆனால் இதற்காக அரசாங்கத்திற்கு ஒரு ரூபாய்கூட செலுத்துவதில்லை என்றும் ஜெய்ராம் ரமேஷ் குறைகூறினார்.

ஊழலை ஒழிப்போம் என்று கூறிவரும் பாரதிய ஜனதா கட்சியில், அரசாங்கத்தின் உயரிய பதவிகளை வகிக்கும் தலைவர்கள் இது போன்ற செயல்களில் ஈடுபட்டு வருவது தொடர்ந்து வெளிப்பட்டு வருவதாகவும் காங்கிரஸ் கட்சியினர் கூறியுள்ளனர்.

இதுபோன்ற புகார்களில் சிக்கியிருக்கும் வசுந்தரா ராஜே, மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் உள்ளிட்டோரை உடனடியாக பதவி நீக்கம் செய்ய வேண்டும் என ஆம் ஆத்மி கட்சியினரும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள்.