1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By K.N.Vadivel
Last Updated : வியாழன், 21 மே 2015 (16:55 IST)

ஆரோக்கியத்திற்கு வேட்டு வைக்கும் மாகி நூடுல்ஸ்: உபி அரசு தடை?

பொதுமக்கள் மற்றும் குழந்தைகளின் ஆரோக்கியத்திற்கு கேடு விளைவிக்கும் வகையில் மாகி நூடுல்ஸ் உள்ளதாக குற்றம்சாட்டி தடை செய்யும் முடிவுக்கு உத்திரப் பிரதேச அரசு வந்துள்ளது. 
 
இன்றைய அவசர, நவீன உலகில், மக்கள் தங்களுக்கு தேவையான உணவைக் கூட  தயாரித்து சாப்பிட முடியாத நிலை உள்ளது. கால மாற்றத்திற்கு ஏற்ப மக்கள் பாஸ்புட் உணவுகளுக்கு மாறிப்போய் உள்ளனர். 
 
குறிப்பாக, குழந்தைகளை கவரும் வகையில் உணவுப் பொருட்கள் தயாரிப்பதன் மூலம் அதிக அளவு லாபமும், நல்ல புகழும் கிடைப்பதால், குழந்தைகளை கவரும் வகையில் விதவிதமாக,  நாவிற்கு சுவை தரும் வகையில்,  தயார் செய்யப்பட்டு விநியோகம் செய்து வருகின்றனர்.
 
நெஸ்லே கம்பெனி தனது பெருமைமிகு  தயாரிப்பாக நூடுல்ஸ்ஐ அறிமுகம் செய்துள்ளது. இதில், தக்காளி, மசாலா, சிக்கன் ஆகிய சுவை தரும் பொருட்களை  நூடுல்ஸோடு தனிப்பாக்கெட்களில் போட்டு கடைகளில் விநியோகம் செய்யப்படுகிறது. 
 
இதை வாங்கி, அதனுடன், நமக்கு விருப்பமான காய்கறிகளையும் சேர்த்து, குறைந்த நேரத்தில், அதாவது இரண்டே நிமிடத்தில், சுடுநீரில் இட்டு கலக்கினால் உடனடி உணவு ரெடி என்பதால் குடும்பத் தலைவிகளின் விருப்பமான உணவாகவும், குழந்தைகள் விரும்பும் சுவையான உணவாகவும் நூடுல்ஸ் இடம் பிடித்துள்ளது.
 
இந்நிலையில், உத்திரபிரதேச மாநில அரசின் உணவு பாதுகாப்புத்துறை உதவி ஆணையர்,  மாநிலத்தில் பல்வேறு பகுதிளில் விற்பனையான மாகி நூடுல்ஸ் பாக்கெட்கள் சிலவற்றை வாங்கி, மேற்கு வங்க மாநில தலைநகர் கொல்கத்தாவில் உள்ள ஆய்வகத்தில் ஆய்வுக்கு அனுப்பி வைத்தார்.
 
இந்த ஆய்வில், மோனோ சோடியம் குளுடாமேட் மற்றும் ஈயம் ஆகியவை மாகி நூடுல்சில் அளவுக்கு அதிகமாக கலந்திருப்பது தெரிய வந்தது.
 
இதனால்,  பொது மக்கள் ஆரோக்கியத்திற்கு கேடு விளைவிக்கும் வகையில் உள்ளதாக கூறி, மாகி நூடுல்ஸ்சை தடைசெய்வது குறித்து ஆலோசனை நடத்தி வருகிறது உபி அரசு. இருப்பினும், மாகி நூடுல்ஸ் மீதான விரிவான ஆராய்ச்சிக்கும் உத்திரவிட்டுள்ளது.
 
ஆனால், இந்த குற்றச்சாட்டை நெஸ்லே நிறுவனம் மறுத்துள்ளது. அந்த நிறுவனம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், “ எங்களது நுாடுல்சில் மோனோசோடியம் குளுடாமேட்டை சேர்க்கவில்லை. பொது மக்கள் நலன் கருதி தரமான மூலப் பொருட்களையே பயன்படுத்தி வருகிறோம். இந்த மூலப்பொருளில் உள்ள குளுடாமேட்தான் நூடுல்ஸ்சில் உள்ளது. 
 
வர்த்தக ரீதியில் விற்பனையாகும் குளுடாமேட்டை நாங்கள் பயன்படுத்தவில்லை. நாம் தினசரி பயன்படுத்தி வரும் தக்காளி, பன்னீர், வெங்காயம் மற்றும் பாலில் இது அதிக அளவில் உள்ளதாக விளக்கம் கொடுத்துள்ளது.