மகள் திருமணத்திற்கு பணம் கிடைக்காத அதிர்ச்சியில் தந்தை மரணம்

லெனின் அகத்தியநாடன்| Last Modified சனி, 19 நவம்பர் 2016 (19:28 IST)
கடந்த 08ஆம் தேதி பிரதமர் மோடி 500, 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என அறிவித்தது நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. கருப்பு பணத்தை ஒழிக்க புதிய 500, 2000 ரூபாய் நோட்டுகள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது என தெரிவிக்கப்பட்டது.


இதனால், பொதுமக்கள் தங்களுடைய அத்தியாவசிய செலவுகளுக்கே கையில் பணம் இல்லாமல் மிகவும் அவதிக்கு உள்ளாகி வருகின்றனர். மத்திய அரசு கொண்டுவந்துள்ள புதிய 2000 ரூபாய் நோட்டுகளையும் சில்லறையாக மாற்றுவதில் பெரும் சிரமம் நீடித்து வருகிறது.

100 ரூபாய் மட்டுமே செல்லும் என்பதால், 100 ரூபாய் நோட்டுக்கு தற்போது கடும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. புதிதாக அறிமுகப்படுத்தியுள்ள 500 ரூபாய் நோட்டுகள் இன்னும் பொதுமக்களின் புழக்கத்திற்கு விடப்படவில்லை.

இதுவரை 4,500 ரூபாய் வரை பழைய நோட்டுகளை மாற்றிக் கொள்ளலாம் என அறிவித்த மத்திய அரசு, தற்போது ஒரு நாளைக்கு அதிகப்பட்சமாக 2,000 ரூபாய் வரை மட்டுமே மாற்றிக்கொள்ள முடியும் என அறிவித்துள்ளது.

இந்நிலையில், உத்தரப்பிரதேச மாநிலத்தின் அலிகார் மாவட்டம், நாக்லா மான்சிங் நகரைச் சேர்ந்தவர் பாபு லால் (50). இவர் வருகின்ற 26ஆம் தேதி தனது மகளுக்கு திருமணம் வைத்துள்ளார். அதற்காக அத்தியாவசிய மற்றும் திருமண செலவுக்கு பணம் தேவைப்பட்டுள்ளது.

இதனால், தான் வைத்திருந்த பழைய ரூபாய் நோட்டுக்களை மாற்ற கடந்த சில நாட்களாக வங்கிக்கும் வீட்டுக்குமாய் அழைந்துள்ளார். ஆனாலும், அவரால் மாற்ற இயலவில்லை. இதனால், பெரிதும் மன உளைச்சலில் பாபுலால் இருந்துள்ளார்.

இந்நிலையில், ரங்கியில் இருந்து வீட்டுக்கு வந்த பாபுலால் நெஞ்சு வலிக்கிறது என்று கூறினார். மருத்துவமனைக்கு கொண்டு சென்றபோது வரும் வழியில் இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.


இதில் மேலும் படிக்கவும் :