வெள்ளி, 19 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Ilavarasan
Last Modified: திங்கள், 1 டிசம்பர் 2014 (18:01 IST)

திறப்பு விழா மேடையில் உத்தவ் தாக்கரேவை விமர்சித்த மாநகராட்சி பெண் உறுப்பினர்

மும்பையில் நடந்த பூங்கா திறப்பு விழா மேடையிலேயே உத்தவ் தாக்கரேவை விமர்சித்த பெண் மாநகராட்சி உறுப்பினரால் விழாவில் பரபரப்பு ஏற்பட்டது.
 
மும்பை மாதுங்கா பகுதியில் சீரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்ட 'ஐந்து தோட்டம்' பூங்கா திறப்பு விழா நேற்று மாலை நடைபெற்றது.
 
இதில் சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே கலந்து கொண்டார். அப்பகுதி காங்கிரஸ் கட்சி மாநகராட்சி உறுப்பினரான நய்னா ஷேத் டோஷியும் இவ்விழாவில் கலந்து கொண்டு பேசினார். அப்போது உத்தவ் தாக்கரே இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டது பற்றி அவர் நேரடியாக விமர்சித்தார்.
 
சிவசேனா கட்சியை நிறுவிய பால் தாக்கரே, ரூ.50 கோடி முதல் ரூ.100 கோடி வரையிலான திட்டப்பணிகளை எங்களை போன்றவர்கள் திறந்து வைக்க வழிவிடுவார். இது போன்ற சிறிய பணிகளுக்கு காரணமாக உறுப்பினரை, அதை திறந்து வைக்க கூறுவார். அப்போது தான் அந்த உறுப்பினருக்கு மதிப்பளித்ததாக இருக்கும் என்று அவர் தெரிவிப்பார். இப்பகுதிக்கு நான் தான் மாநகராட்சி உறுப்பினர். இந்த பூங்காவிற்கான திட்டத்தை நான் தான் கொண்டு வந்தேன். இதற்கான பெருமை என்னை தான் சாரும். ஆனால் இந்த விழாவிற்கு கூட நீங்கள் வந்துள்ளீர்கள் என்று ஷேத், உத்தவை கடுமையாக சாடினார்.
 
இவ்வாறு அவர் பேசும்போது, காங்கிரஸ்காரர்கள் யாரும் மேடையில் இருக்கவில்லை. ஆனால், பயமில்லாமல் மேடையிலேயே உத்தவை அவர் குற்றம் சாட்டினார். எனினும் அவர் பேசி முடித்தவுடன் தனது கட்சிக்காரர்களை அழைத்த உத்தவ், ஷேத்தை பாதுகாப்பாக காரில் ஏற்றி அவரது இல்லத்துக்கு அனுப்பும்படி உத்தரவிட்டார். அவரும் பாதுகாப்பாக காரில் ஏறி வீட்டிற்கு சென்றார்.
 
அவருக்கு பின்னர் பேசிய உத்தவ், குழந்தைகளுக்கான பூங்கா என்பதாலேயே இதை திறந்து வைக்க தான் வந்ததாக கூறினார்.