வியாழன், 28 மார்ச் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Suresh
Last Updated : புதன், 2 செப்டம்பர் 2015 (08:18 IST)

12 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி 10 தொழிற்சங்கங்கள் நாடு தழுவிய வேலை நிறுத்தம்

12 அம்ச கோரிக்கைகளை வலியுறுததி, 10 தொழிற்சங்கங்கள் இன்று நாடு தழுவிய வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளன.
 
தொழிலாளர் நலச்சட்ட விதிகளை எந்தவித விதிவிலக்கும் இன்றி அமல்படுத்த வேண்டும், பொதுத்துறை நிறுவனங்களை தனியார் மயம் ஆக்கக் கூடாது. குறைந்தபட்ச மாத சம்பளம் ரூ.15 ஆயிரம் என நிர்ணயிக்க வேண்டும், அமைப்புசாரா தொழில் துறைக்கு சமூக பாதுகாப்பு வழங்க வேண்டும், விலைவாசியை கட்டுப்படுத்தவேண்டும் என்பவை உள்ளிட்ட 12 அம்ச கோரிக்கைகளை மத்திய தொழிற்சங்கங்கள் வலியுறுத்தி வந்தன.
 
இந்த கோரிக்கைகளை வலியுறுத்தி இன்று ஒரு நாள் வேலை நிறுத்தப் போராட்டம் நடத்தப்படும் என்று மத்திய தொழிற்சங்கங்கள் அறிவித்தன. இதையடுத்து தொழிற்சங்கங்களின் தலைவர்களுடன் மத்திய அரசு பேச்சுவார்த்தை நடத்தியது.
 
ஆனால், இந்த பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டப்படவில்லை. இதையடுத்து திட்டமிட்டபடி, நாடு முழுவதும் ஒரு நாள் வேலை நிறுத்தத்தில், 10 தொழிற்சங்கங்கள் கலந்து கொள்கின்றன.
 
இந்த வேலை நிறுத்தத்தில் பொதுத்துறை வங்கிகள், தனியார் வங்கிகள், வெளிநாட்டு வங்கிகள், கிராம வங்கிகள், கூட்டுறவு வங்கிகள் பங்கு பெறுகின்றன. அவற்றின் 5 லட்சம் ஊழியர்கள் வேலை நிறுத்ததத்தில் ஈடுபட்டுள்ளனர்.
 
இந்த வேலைநிறுத்தத்தில் பாரத ஸ்டேட் வங்கி (SBI) மட்டும் பங்கேற்கவில்லை என்று கூறப்படுகிறது.
 
தமிழகத்தில் சுமார் 1½ லட்சம் மத்திய அரசு ஊழியர்கள் இந்த வேலைநிறுத்தத்தில் பங்கேற்கின்றனர். மத்திய அரசு ஊழியர்கள் மட்டும் அல்லாது, தமிழ்நாடு அரசு ஊழியர்கள் சங்கம், ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி, பட்டதாரி மற்றும் முதுநிலை பட்டதாரி ஆசிரியர்கள் சங்கம், அரசு கல்லூரி ஆசிரியர் மன்றம், உள்ளாட்சித்துறை ஊழியர்கள் சங்கம், வணிகவரி, வருவாய்த்துறை, மருத்துவத்துறை ஆகியவற்றை சேர்ந்த 10 லட்சம் மாநில அரசு ஊழியர்களும் இந்த வேலைநிறுத்தத்தில் பங்கேற்கின்றனர்.
 
தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவை இந்த வேலைநிறுத்த போராட்டத்துக்கு  தார்மீக ஆதரவு தெரிவிப்பதாகவும், அதே நேரத்தில் கடைகளை அடைக்குமாறு கூறி, வணிகர்களை கட்டாயப்படுத்த வேண்டாம் என்றும் தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவை தலைவர் த.வெள்ளையன் கூறியுள்ளார்.
 
இந்த வேலை நிறுத்தப் போராட்டத்திற்க ஆதரவாக தமிழகத்தில் 2 லட்சம் ஆட்டோக்கள் இன்று ஓடாது என்று ஆட்டோ தொழிலாளர் சம்மேளன தலைவர் தெரிவித்துள்ளார். 
 
இந்நிலையில், இந்த வேலைநிறுத்தத்தில் பாஜக ஆதரவு பெற்ற பிஎம்எஸ் என்றழைக்கப்படும் பாரதீய மஸ்தூர் சங்கம் கலந்துகொள்ளவில்லை. அதேபோல தமிழகத்தில் அதிமுக தொழிற்சங்கமான அண்ணா தொழிற்சங்கம் இந்த போராட்டத்தில் கலந்துகொள்ளவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.