வியாழன், 25 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By லெனின் அகத்தியநாடன்
Last Modified: சனி, 21 நவம்பர் 2015 (13:23 IST)

பருப்பு விலை உயர இதுதான் காரணம்! - ரூ. 40க்கு கொள்முதல்; ரூ.200க்கு விற்பனை

கார்ப்பரேட்டு கம்பெனிகள் விவசாயிகளிடமிருந்து ரூ. 40க்கு கொள்முதல் செய்து, ரூ.200க்கு விற்பனை செய்து வருவதுதான் பருப்பு விலை உயர காரணம் என்று அகில இந்திய விவசாயிகள் சங்கம் குற்றம்சாட்டியுள்ளது.
 

 
கடந்து சில தினங்களுக்கு முன்பு பருப்பு விலைகள் தாறுமாறாக எகிறியது. இதனால், ஏழை, எளிய மற்றும் நடுத்தர வர்க்க பொதுமக்கள் மிகவும் பாதிப்படைந்தனர். இதனையடுத்து, பிரதமர் மோடி பருப்புகள் பதுக்குபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரித்து இருந்தார்.
 
இந்நிலையில், அகில இந்திய விவசாயிகள் சங்கத்தின் நிர்வாகிகள் கூட்டம் தில்லியில், அதன் தலைவர் அம்ரா ராம் தலைமையில் நடைபெற்றது. அதில், நாடு முழுவதும் உள்ள விவசாய நிலைமை குறித்து இந்தக் கூட்டம் விரிவாக ஆய்வு செய்தது.
 
அப்போது, மிகப்பெருமளவில் விவசாயிகளிடமிருந்து பருப்பு வகைகளை கொள்முதல் செய்த தனியார் பெரும் கம்பெனிகள், விவசாயிக்கு கொடுத்ததை விட 5 மடங்கு கூடுதலாக விலைவைத்து மக்கள் தலையில் விலையை ஏற்றி விற்று கொள்ளை லாபமடித்த விபரங்கள் குறித்து விவாதிகக்கப்பட்டது.
 
அதாவது, மத்திய அரசு பருப்பு வகைகளை விவசாயிகளிடமிருந்து பெரும் நிறுவனங்கள் நேரடியாக கொள்முதல் செய்து கொள்ள அனுமதித்தது.
 
இதனையடுத்து, பருப்பு கிலோ ஒன்றுக்கு வெறும் 40 ரூபாய் மட்டுமே விவசாயிக்கு கொடுத்த பெரும் கார்ப்பரேட் கம்பெனிகள், அதை வெளி மார்க்கெட்டில் 180 ரூபாய் அதிகம் விலைவைத்து மொத்தம் 220 ரூபாய்க்கு விற்று பல்லாயிரம் கோடி ரூபாய் கொள்ளையடித்தன.
 
இந்தியாவில் ஆண்டு ஒன்றிற்கு சுமார் 24 மில்லியன் டன் பருப்பு வகைகள் உட்கொள்ளப்படுகின்றன. அந்தக் கணக்கின்படி கடந்த 2 மாதங்களில் மட்டும் சுமார் 4 மில்லியன் டன் அளவிற்கு பருப்பு உட்கொள்ளப்பட்டுள்ளது. இந்த 4 மில்லியன் டன் பருப்பை விற்றவகையில் மட்டும், பெரும் நிறுவனங்கள் ஒரு கிலோவிற்கு ரூ.180 கொள்ளையடித்து லாபம் ஈட்டியுள்ளன.
 
இந்த விபரத்தை வெளியிட்டுள்ள விவசாயிகள் சங்கம், இந்தக் கொள்ளையை மத்திய பாஜக தலைமையிலான மோடி அரசின் ஆதரவோடு நடத்தியபெரும் கார்ப்பரேட் கம்பெனிகளின் பெயர்களையும் வெளியிட்டுள்ளது.
 
குறிப்பாக மோடியின் மிக நெருங்கிய நண்பரான அதானியின் விவசாய மார்க்கெட்டிங் கம்பெனியான அதானி - வில்மர் நிறுவனம் தனது ‘பார்ச்சூன்‘ நிறுவனத்தின் மூலம்பருப்பு வகைகள் மற்றும் எண்ணெய் வகைகளை விற்பதற்காக பல லட்சம் டன் பருப்பு வகைகளை விவசாயிகளிடமிருந்து கொள்முதல் செய்துள்ளது.
 
ஆனால், கிலோ ஒன்றுக்கு வெறும் ரூ.40 மட்டுமே விவசாயிக்கு வழங்கி விட்டு, அதே பருப்பை பாக்கெட் போட்டு வெளி மார்க்கெட்டில் ரூ.220 என்ற விலையில் விற்று சம்பாதித்துள்ளது. விலை ஏறும் வரையில் அதானியின் பார்ச்சூன் நிறுவனம் ஒட்டுமொத்த பருப்பு வகைகளையும் பதுக்கியது என்றும் விவசாயிகள் சங்கம் குற்றம் சாட்டியுள்ளது.
 
அதானி - வில்மர் மட்டுமின்றி, டாட்டா, பிர்லா, ரிலையன்ஸ், ஐடிசி மற்றும் இதர கார்ப்பரேட் விவசாய வர்த்தக நிறுவனங்களும், பருப்பு இருப்பு வைத்துக் கொள்வதற்கான வரையறையை அரசு தளர்த்தியதை காரணமாகக் கொண்டு, மிகப் பெருமளவில் பதுக்கி விலையை ஏற்றின என்றும், விவசாயிகள் சங்கம் குற்றம் சாட்டியுள்ளது.