வெள்ளி, 19 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By லெனின் அகத்தியநாடன்
Last Updated : திங்கள், 24 நவம்பர் 2014 (12:27 IST)

திருப்பூரில் பனியன் நிறுவனத்தில் பதுங்கியிருந்த தீவிரவாதிகள் இருவர் கைது

திருப்பூரில் தலைமறைவாக வேலை பார்த்து வந்த 2 மேகாலயா  தீவிரவாதிகளை காவல்துறையினர் நேற்று கைது செய்துள்ளனர்.
 
மேகாலயா மாநிலம் தெற்குப் பகுதியில் உள்ள கிராமத்தை சேர்ந்தவர் அலாஸ் ஆர்.சங்மா. கடந்த அக்டோபர் மாதம் 15ஆம் தேதி துப்பாக்கியை சுத்தம் செய்து கொண்டிருந்தபோது எதிர்பாராத விதமாக துப்பாக்கியின் விசையில் பட்டதால், சங்மாவின் 8 வயது மகனின் மீது பாய்ந்தது. இதனால் அந்த சிறுவன் இறந்துள்ளான். இதனால் அலாஸ் ஆர்.சங்மா தலைமறைவாகி விட்டார்.
 
இதுகுறித்து வழக்குப் பதிவு செய்து தலைமறைவான அலாஸ் ஆர்.சங்மாவை காவல் துறையினர் வலைவீசி தேடி வந்துள்ளனர்.
 
இந்நிலையில் சங்மா தமிழகத்தில் திருப்பூர் மாவட்டத்தில், சின்னக்கரையில் உள்ள பனியன் நிறுவனத்தில் பணியாற்றி வருவதாக மேகாலயா காவல் துறையினருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் தீவிரவாத தடுப்பு பிரிவு தனிப்படையினர் நேற்று முன்தினம் இரவு திருப்பூர் மாவட்டம் பல்லடத்துக்கு வந்தனர்.
 
பனியன் நிறுவனத்திற்கு வந்த காவல் துறையினர் விடுதியில் அதிரடி சோதனை நடத்தினர். அப்போது அங்கு, அலாஸ் ஆர்.சங்மா இருந்துள்ளார். பிறகு, அவருடன் பணியாற்றிக்கொண்டு இருந்த அசாம் மற்றும் மேகாலயா மாநில தொழிலாளர்களிடம் தீவிரவாத தடுப்பு பிரிவு காவல் துறையினர் விசாரணை நடத்தினார்கள்.
 
 
அப்போது, அந்த பனியன் நிறுவனத்தில் தொழிலாளியாக பணியாற்றி வந்த வில்லியம் ஏ.சங்மா என்பவரையும் காவல் துறையினர் கைது செய்துள்ளனர். அவர் மேகாலயா மாநிலம் காவல் நிலைய காவலில் இருந்து கடந்த ஆகஸ்டு மாதம் தப்பி ஓடிய ஏ.என்.சி.ஏ. என்ற தீவிரவாதக் குழுவின் தலைவர் என்பது குறிப்பிடத்தக்கது.
 
பின்னர் இருவரையும் நேற்று மாலை துப்பாக்கி ஏந்திய பலத்த போலீஸ் பாதுகாப்புடன் விமானம் மூலம் மேகாலயாவுக்கு காவல் துறையினர் அழைத்து சென்றனர்.