வியாழன், 25 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Suresh
Last Modified: செவ்வாய், 9 டிசம்பர் 2014 (10:52 IST)

சிறையில் இருந்து தப்பிய தீவிரவாதிகள்: நாடு முழுவதும் தாக்குதல் நடத்தத் திட்டம்

மத்தியப் பிரதேச மாநிலம் காந்த்வா நகர சிறையிலிருந்து தப்பிய 5 தீவிரவாதிகள் பாகிஸ்தானின் உளவு அமைப்பான ஐ.எஸ்.ஐ உதவியுடன் நாடுமுழுவதும் தாக்குதல் நடத்தத் திட்டமிட்டு இருப்பதாக உளவுத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.
 
காந்த்வா நகர சிறையில் இருந்து தடை செய்யப்பட்ட இயக்கத்தைச் சேர்ந்த 7 தீவிரவாதிகள் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 14 அடி நீள பாதுகாப்பு சுவரைத் தாண்டி தப்பி சென்றனர்.
 
சிறையிலிருந்து தீவிரவாதிகள் தப்பிய மறுநாள் கைதி ஒருவர் சரணடைந்தார். தீவிரவாதிகள் குழுவின் தலைவரான பைசல் கடந்த டிசம்பர் மாதம் மத்தியப் பிரதேச மாநிலம் பர்வானி என்ற இடத்தில் பிடிபட்டார்.
 
மற்ற தீவிரவாதிகள் 5 பேர் ஓராண்டு காலமாகத் தலைமறைவாக உள்ளனர். இவர்களின் நடமாட்டம் தெலங்கானா, தமிழகம், மத்தியப் பிரதேசம், கர்நாடகா, மகாராஷ்டிரா ஆகிய மாநிலங்களில் இருக்கலாம் என்று கூறப்படுகிறது.
 
இந்நிலையில் பாகிஸ்தானின் உளவு அமைப்பான ஐ.எஸ்.ஐ உதவியுடன் தலைமறைவாக உள்ள தீவிரவாதிகள் நாடு முழுவதும் தாக்குதல் நடத்தத் திட்டமிட்டுள்ளதாக உளவுத்துறை முகமைகளுக்கு தகவல்கள் கிடைத்துள்ளன.
 
இதையடுத்து அனைத்து மாநிலங்களுக்கும் தீவிரவாதிகளின் தாக்குதல் திட்டம் குறித்து உள்துறை அமைச்சகம் எச்சரிக்கை விடுத்துள்ளது. அனைத்து மாநிலங்களும் தயார் நிலையில் இருக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.