வியாழன், 25 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By வீரமணி பன்னீர்செல்வம்
Last Modified: வியாழன், 11 செப்டம்பர் 2014 (18:28 IST)

மீடியாக்களை மிரட்டிய சந்திரசேகர ராவ்: கட்ஜூ கடும் கண்டனம்

ஆந்திராவில் இருந்து புதிதாக பிரிந்த தெலங்கானா மாநில முதலமைச்சராக இருப்பவர் சந்திரசேகர ராவ். இவர் ஒரு விழாவில் கலந்து கொண்டு பேசும்போது, தெலங்கானா மாநிலத்திற்கு அவப்பெயரை ஏற்படுத்தும் வகையில் செயல்படும் மீடியாக்களை 10 கி.மீ. ஆழ குழி தோண்டி புதைப்போம் என்று கடுமையாக விமர்சித்தார்.
 
இந்த கருத்து மிகவும் ஆட்சேபனைக்குரியது, ஜனநாயக நாட்டில் இது முற்றிலும் ஏற்றுக்கொள்ளமுடியாது என்று இந்திய பிரஸ் கவுன்சில் தலைவர் மார்கண்டேய கட்ஜூ கண்டனம் தெரிவித்துள்ளார்.
 
இதுபற்றி அவர் மேலும் கூறியதாவது:-
 
உண்மையிலேயே அந்த டி.வி. சேனல் தரக்குறைவான செயல்களில் ஈடுபட்டிருந்தால், அத்தகைய கருத்துக்களை பயன்படுத்துவதை நிறுத்திக்கொள்ள வேண்டும்.
 
தரக்குறைவான கருத்துக்களை வெளியிட்டதாக கூறப்படும் டி.வி. சேனல் தங்கள் டிடிஎச் சேவை மூலமாக தொடர்ச்சியாக வருத்தம் தெரிவித்துவிட்டது. மேலும், தெலங்கானா சட்டசபை சபாநாயகர் மற்றும் எம்.எல்.ஏ.க்களுக்கு கடிதங்களும் எழுதியுள்ளது.
 
எனினும், அந்த தொலைக்காட்சியின் கருத்துக்கு பதிலடி கொடுப்பதற்காக, முதல்வர் ஒரு பொதுமேடையில் இருந்துகொண்டு, சட்டசபை மற்றும் கலாச்சாரத்திற்கு எதிராக ஒரு கருத்து கூறும் தொலைக்காட்சி சேனலை 10 கி.மீ. குழி தோண்டி புதைப்போம் என்று கூறுவதா? இது என்ன பேச்சு? ஒரு முதலமைச்சர் இப்படி பேசியிருப்பது முற்றிலும் தேவையற்றது மற்றும் பொருத்தமற்றதாகும்.
 
ஒரு முதலமைச்சர் பதவியில் இருந்து கொண்டு இப்படி பேசுவது மிகவும் முறையற்ற, முற்றிலும் ஏற்றுக்கொள்ள முடியாது என்பது என்னுடைய தனிப்பட்ட கருத்து.
 
இவ்வாறு அவர் கூறினார்.