ஆந்திராவில் தமிழர்கள் சுட்டுக்கொல்லப்பட்ட விவகாரம் - நீதிமன்றத் தடைக்கு எதிராக மேல்முறையீடு

லெனின் அகத்தியநாடன்| Last Modified வியாழன், 18 ஜூன் 2015 (15:09 IST)
தமிழகத் தொழிலாளர்கள் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் குறித்து விசாரிக்க, ஹைதராபாத் உயர்நீதிமன்றம் விதித்துள்ள தடையை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று தேசிய மனித உரிமைகள் ஆணைய உறுப்பினர் தெரிவித்துள்ளார்.
இது குறித்து தேசிய மனித உரிமை ஆணைய உறுப்பினரும், நீதிபதியுமான முருகேசன் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தபோது, ”ஆந்திராவில் சுட்டுக் கொல்லப்பட்ட- தமிழகத்தைச் சேர்ந்த 20 தொழிலாளர்களின் குடும்பங்களுக்கு ஆந்திர மாநில அரசு இழப்பீடு வழங்க வேண்டும் என்பன போன்ற பல்வேறு உத்தரவுகளை தேசிய மனித உரிமைகள் ஆணையம் பிறப்பித்துள்ளது.

அதை எதிர்த்து அவர்கள் ஹைதராபாத் உயர்நீதிமன்றத்தில் தடை உத்தரவு பெற்றுள்ளனர். அந்தத் தடை உத்தரவைநீக்க மனித உரிமை ஆணையம் சட்டப்படி நடவடிக்கை மேற்கொள்ளும். தேசிய மனித உரிமை ஆணையக் கூட்டம் ஜூன் 22ஆம் தேதி நடைபெறுகிறது. அதில், இது குறித்து விவாதித்து உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்வதற்கான முடிவு எடுக்கப்படும்.
இப்பிரச்சனையில் முழுக்க முழுக்க ஆந்திர அரசுதான் சம்பந்தப்பட்டுள்ளது. ஆனால், விசாரணையில் அவர்கள் எந்த ஒத்துழைப்பும் அளிக்கவில்லை. இப்பிரச்சனையில் தமிழக அரசு முழு ஒத்துழைப்பு அளித்தது.

குறிப்பாக சுட்டுக் கொல்லப்பட்டவர்களின் குடும்பத்தினரிடம் விசாரணை நடத்துவதற்கு உரிய ஒத்துழைப்பை அளித்தது. தமிழக போலீசாரும் முழு ஒத்துழைப்பு அளித்தனர். தமிழ்நாட்டில் சேலம், கடலூர் மாவட்டங்களைச் சேர்ந்த பெண் குழந்தைகள் வீட்டு வேலைக்காக கடத்தப்படுகின்றனர்.
அங்கு அவர்கள் பாலியல் தொல்லைகளுக்கு ஆளாவதாக பத்திரிகைகளில் செய்திகள் வெளியாகி உள்ளன. இதன் அடிப்படையில் கேரளா, தமிழ்நாடு ஆகிய மாநிலங்களின் தலைமைச் செயலாளர்கள் மற்றும் காவல்துறை தலைவர்களுக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பப்பட்டு உள்ளது. 4 வாரத்தில் பதில் அளிக்க அவர்களுக்கு கால அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது” என்று கூறியுள்ளார்.இதில் மேலும் படிக்கவும் :