வியாழன், 28 மார்ச் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Murugan
Last Modified: புதன், 31 ஆகஸ்ட் 2016 (14:24 IST)

கேரளாவில் குட்டி பட்டாளம் நிகழ்ச்சி ரத்து : தமிழகத்திலும் தடை வருமா?

சன் டிவியில் ஒளிபரப்பாகும் குட்டி சுட்டீஸ் நிகழ்ச்சி போல், கேரளாவில் சூர்யா டிவியில் ஒளிபரப்பாகும் குட்டி பட்டாளம் நிகழ்ச்சிக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது.


 

 
சன் டிவியில் ஒளிபரப்பாகும் குட்டி சுட்டீஸ் நிகழ்ச்சியை நடிகர் இமான் அண்ணாச்சி நடத்துகிறார். இது 2 முதல் 5 வயதுக்குட்பட்ட குழந்தைகள் கலந்து கொள்ளும் நிகழ்ச்சி ஆகும்.  குழந்தைகளிடம் ஏடாகூடமான கேள்விகளை கேட்டு பல சமயங்களில் அவர் பார்வையாளர்களை முகம் சுளிக்க வைப்பதுண்டு.
 
இதேபோன்ற நிகழ்ச்சி, சன் நிறுவனத்தின் மலையாள தொலைக்காட்சியான சூர்யா தொலைக்காட்சியில் ‘குட்டி பட்டாளம்’ என்ற பெயரில் நடத்தப்படுகிறது. 
 
மூன்று வருடங்களுக்கு முன்பு நடத்தப்பட்ட அந்த ஒரு நிகழ்ச்சியில் ஒரு சிறுமி கலந்து கொண்டாள். அவளிடம் அந்த  பெண் தொகுப்பாளினி “ நீ எதற்காக இங்கே வந்தாய்?” எனக்கேட்டார். அதற்கு அந்த சிறுமி கல்யாணம் செய்து கொள்ள என்று கூற அந்த சிறுமியின் பெற்றோர் மட்டுமில்லாமல் அங்கிருந்த பார்வையாளர்கள் அனைவரும் சிரித்தனர்.
 
உடனே அந்த தொகுப்பாளினி, இந்த பொண்ணுக்கு திருமணம் செய்து கொள்ள அதிக ஆசை போல் இருக்கு என்று கூறியதோடு, அந்த சிறுமியிடம் இந்த கூட்டத்தில் யார் உனக்கு கணவனாக வர வேண்டும்? என்று கேட்க, அந்த சிறுமியோ, அங்கிருந்த ஒரு ஆணை கைகாட்ட அதற்கும் அனைவரும் சிரித்தனர்.
 
இந்நிகழ்ச்சியை பார்த்த ஒருவர், கேரள சிறுவர் நல ஆணையத்திற்கு புகார் அனுப்பினார். அந்த நிகழ்ச்சி குழந்தைகளுக்கு மன ரீதியான பாதிப்புகளை ஏற்படுத்துவதாக அவர் குற்றம் சாட்டியிருந்தார். மேலும், அந்த தொகுப்பாளினி நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும் குழந்தைகளிடம் இரட்டை அர்த்தத்தில் பேசுவதாகவும் குறிப்பிட்டிருந்தார். 
 
இதையடுத்து சிறுவர் நல ஆணையம் நடவடிக்கை எடுக்கவே, அந்த நிகழ்ச்சியை விரைவில் முடித்துக் கொள்வதாக தொலைக்காட்சி தரப்பு விளக்கம் அளித்தது.