வெள்ளி, 19 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By வீரமணி பன்னீர்செல்வம்
Last Modified: வெள்ளி, 22 ஆகஸ்ட் 2014 (13:31 IST)

நீதிபதிகள் நியமன ஆணைய மசோதாவுக்கு எதிரான மனுக்கள்: உச்ச நீதிமன்றத்தில் 25 ஆம் தேதி விசாரணை

நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட நீதிபதிகள் நியமன ஆணைய மசோதாவுக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட 4 பொதுநல மனுக்கள் நேற்று விசாரணைக்கு ஏற்றுக் கொள்ளப்பட்டன. அந்த மனுக்கள் வருகிற 25 ஆம் தேதி விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும் என்று உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
 
உச்ச நீதிமன்றம் மற்றும் உயர் நீதிமன்ற நீதிபதிகள் நியமனத்தில் தற்போது பின்பற்றப்பட்டு வரும் ‘கொலிஜியம்’ முறையை ஒழித்து விட்டு, தேசிய நீதிபதிகள் நியமன ஆணையத்தின் மூலம் நீதிபதிகளை நியமிக்க வகை செய்யும் அரசியல் சட்ட திருத்த மசோதா சமீபத்தில் நாடாளுமன்றத்தின் இரு சபைகளிலும் நிறைவேற்றப்பட்டது.
 
6 பேரை கொண்ட இந்த நீதிபதிகள் ஆணையத்துக்கு உச்ச நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி தலைவராக இருப்பார். உச்ச நீதிமன்றத்தின் மூத்த வழக்கறிஞர்கள் 2 பேர், மத்திய சட்ட அமைச்சர், பிரபல பிரமுகர்கள் 2 பேர் இதன் உறுப்பினர்களாக இருப்பார்கள். இந்த 6 பேரில் யாராவது இருவர், குறிப்பிட்ட நீதிபதியின் நியமனத்துக்கு எதிர்ப்பு தெரிவித்தால், அவரது பெயர் பரிசீலிக்கப்படமாட்டாது.
 
ஆனால், உச்ச நீதிமன்றம் தலைமை நீதிபதி ஆர்.எம்.லோதா, தற்போதுள்ள கொலிஜியம் முறை மூலம் நீதிபதிகளை நியமிக்கும் முறைக்கு ஆதரவாக கருத்து தெரிவித்துள்ளார். சுதந்திர தின விழாவில் அவர் பேசுகையில், நிர்வாகம், நாடாளுமன்றம், நீதித்துறை ஆகிய மூன்றும் ஒன்றின் அதிகாரத்தில் மற்றொன்று தலையிடக்கூடாது என்று குறிப்பிட்டார்.
 
இந்த நிலையில், நீதிபதிகள் நியமன ஆணையம் அமைப்பதற்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் 4 பொதுநல மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. வழக்கறிஞர்கள் ஆர்.கிருஷ்ணமூர்த்தி, என்.ராஜாராமன் ஆகியோர் இணைந்து ஒரு மனுவும், வழக்கறிஞர் எம்.எல்.சர்மா, முன்னாள் கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் பிஸ்வஜித் பட்டாச்சார்யா மற்றும் வழக்கறிஞர் ஆர்.கே.கபூர் ஆகியோர் தனித்தனியாக ஒரு மனுவும் தாக்கல் செய்துள்ளனர்.
 
உச்ச நீதிமன்றம் தலைமை நீதிபதி ஆர்.எம்.லோதா தலைமையிலான அமர்வு இந்த4 மனுக்களையும் ஒன்றாக இணைத்து நேற்று விசாரணைக்கு ஏற்றுக் கொண்டது.
 
தேசிய நீதிபதிகள் நியமன ஆணைய மசோதாவையும், அதுதொடர்பான 121வது அரசியல் சாசன திருத்த மசோதாவையும் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றியது அரசியல் சட்ட அடிப்படைக்கு எதிரானது என்றும், அரசியல் சாசனத்தின் 50வது பிரிவில் நீதித்துறை மற்றும் நிர்வாகத்தின் அதிகாரங்கள் தனித்தனியாக வரையறுக்கப்பட்டுள்ளன என்றும், அரசியல் சாசனத்தில் நீதித்துறைக்கு தனியாக வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களும், சுதந்திரமும் மாற்ற முடியாதவை என்றும் மனுதாரர்கள் தங்கள் மனுக்களில் கூறியுள்ளனர்.
 
மேலும் உச்ச நீதிமன்றம் மற்றும் உயர் நீதிமன்ற நீதிபதிகளை நியமிக்கும் மற்றும் நீதிபதிகளை இடமாற்றம் செய்யும் அதிகாரத்தை உச்ச நீதிமன்றம் தலைமை நீதிபதிக்கு அரசியல் சாசனம் வழங்கியிருப்பதாகவும் அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
 
இந்த மனுக்கள் வருகிற 25 ஆம் தேதி (திங்கட்கிழமை) அன்று விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும் என்று நீதிபதிகள் தெரிவித்தனர்.