வெள்ளி, 29 மார்ச் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By வீரமணி பன்னீர்செல்வம்
Last Updated : புதன், 1 ஏப்ரல் 2015 (17:51 IST)

மன்மோகன் சிங்கை ஆஜராக கோரிய சம்மனுக்கு தடை: சிபிஐக்கு உச்ச நீதிமன்றம் நோட்டீஸ்

நிலக்கரி சுரங்க ஒதுக்கீட்டு வழக்கில் மன்மோகன் சிங்கை ஆஜராக தனி நீதிமன்றம் அனுப்பிய சம்மனுக்கு தடைவித்த உச்ச நீதிமன்றம், பதிலளிக்க சிபிஐக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டுள்ளது.
 
கடந்த 2005ஆம் ஆண்டு, மன்மோகன் சிங் பிரதமராக இருந்தபோது நிலக்கரித் துறையின் பொறுப்பும் அவர் வசம் இருந்தது. இந்த காலகட்டத்தில் ஒடிசாவில் உள்ள தலபிரா–2 சுரங்கத்தில் இருந்து ஹிண்டால்கோ என்னும் நிறுவனத்துக்கு நிலக்கரியை எடுக்க அனுமதி வழங்கியதில் முறைகேடு நிகழ்ந்ததாக சிபிஐ வழக்கு ஒன்றை பதிவு செய்தது. டெல்லியில் உள்ள சிபிஐ தனி நீதிமன்றத்தில் நீதிபதி பாரத் பராசர் முன்னிலையில் இந்த வழக்கின் விசாரணை நடைபெற்று வருகிறது.
 
இந்த வழக்கு தொடர்பாக சிபிஐ, நீதிமன்றத்தில் தாக்கல் செய்த அறிக்கையின் அடிப்படையில், முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்கை இந்த வழக்கில், குற்றம் சாட்டப்பட்டவராக, ஏப்ரல் 8ஆம் தேதியன்று நேரடியாக ஆஜராகுமாறு கடந்த 11ஆம் தேதி சம்மன் அனுப்பப்பட்டது. அவருடன் நிலக்கரித்துறையின் முன்னாள் செயலாளர் பி.சி.பரேக், ஹிண்டால்கோ நிறுவன தலைவர் குமார் மங்கலம் பிர்லா, ஹிண்டால்கோ அதிகாரிகள் சுபேந்து அமிதாப், டி.பட்டாச்சார்யா, ஹிண்டால்கோ நிறுவனம் ஆகியோருக்கும் நீதிமன்றம் சம்மன் அனுப்பியது. இதனை எதிர்த்து மன்மோகன் சிங் தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது.
 
இதுபோல், நிலக்கரித்துறை முன்னாள் செயலாளர் பி.சி.பராக் உள்ளிட்ட 5 பேரும் சிபிஐ நீதிமன்றத்தின் சம்மனை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் தனித்தனியாக மனுத்தாக்கல் செய்தனர். தனி நீதிமன்றம் அனுப்பிய சம்மனுக்கு எதிரான மனுவை விசாரித்த உச்ச நீதிமன்றம், சம்மனுக்கு தடைவிதித்து உத்தரவிட்டது. மன்மோகன் சிங் மற்றும் பிறருக்கு எதிரான சம்மனுக்கு உச்ச நீதிமன்றம் தடை விதித்து உள்ளது. இதுதொடர்பாக 3 வாரங்களுக்குள் பதில் அளிக்க உச்ச நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டு உள்ளது. உச்ச நீதிமன்றம், நிலக்கரி சுரங்க ஊழல் வழக்கில் தனி நீதிமன்றம் நடவடிக்கைக்கும் தடைவிதித்துள்ளது.
 
மன்மோகன் சிங் சார்பில் முன்னாள் மத்திய அமைச்சரும், மூத்த வழக்கறிஞருமான கபில் சிபல் ஆஜரானார்.
 
மன்மோகன் சிங் தரப்பு மனுவில் கூறப்பட்டு இருந்ததாவது:–
 
மேலும் அடுத்த பக்கம்..

முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்குக்கு சிபிஐ நீதிமன்ற நீதிபதி பாரத் பராசர் அனுப்பியுள்ள சம்மன் சட்டரீதியாக தவறானது. உரிய முறையில் மனதை செலுத்தாமல், இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. மன்மோகன் சிங்குக்கு நேரடியாக அந்த பிரச்சனையில் பங்கேற்பு உள்ளதாக எங்கும் கூறப்படவில்லை.
 
இந்த முறைகேடு நிகழ்ந்ததாக கூறப்படும் காலகட்டமான 2005ஆம் ஆண்டில், அதாவது இந்தியாவின் முன்னணி கார்ப்பரேட் நிறுவனம் ஒன்றுக்கு நிலக்கரி ஒதுக்கீடு வழங்கப்பட்டபோது நிலக்கரி ஒதுக்கீடு தொடர்பான கோட்பாடு எதுவும் வகுக்கப்படவில்லை.
 
எனவே, ஒரு குறிப்பிட்ட நிறுவனத்துக்கு நிலக்கரி ஒதுக்குவது தொடர்பாக முன்னாள் பிரதமர் ஏதேனும் பாரபட்சம் காட்டினார் என்று குற்றம்சாட்ட முடியாது. அவர் என்றும் கடமை உணர்வுடனும், உச்சபட்ச நேர்மையுடனும் செயல்பட்டுள்ளார். அவர் கடமை தவறியதாகவோ, நேர்மை தவறி செயல்பட்டதாகவோ எந்த வகையிலும் குற்றம் சுமத்த முடியாது.
 
ஒடிசா மாநில அரசின் சிபாரிசின் பேரில், ஹிண்டால்கோ நிறுவனத்துக்கு நிலக்கரி சுரங்கம் ஒதுக்கும் முடிவை உரிய அதிகாரம் படைத்தவர் என்ற முறையில் மன்மோகன் சிங் எடுத்தார். முடிவு எடுத்ததில் தவறு நடந்திருக்கலாம். ஆனால், அதிகார துஷ்பிரயோகம் செய்ததாக காட்டுவதற்கு எந்த ஆதாரமும் இல்லை. அரசாங்கத்தில் முடிவு எடுப்பது, குற்றச்செயல் அல்ல. எனவே, சிபிஐ தனி நீதிமன்றம் மன்மோகன் சிங்கை வரும் ஏப்ரல் 8ஆம் தேதி நேரில் ஆஜராகுமாறு பிறப்பித்துள்ள சம்மனை ரத்து செய்ய உத்தரவிட வேண்டும். இவ்வாறு அந்தமனுவில் கூறப்பட்டு இருந்தது.