வியாழன், 25 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By லெனின் அகத்தியநாடன்
Last Updated : செவ்வாய், 28 ஜூலை 2015 (12:04 IST)

யாகூப் மேமன் மனுவை எப்படி தள்ளுபடி செய்தீர்கள்? - உச்ச நீதிமன்றம் கேள்வி

யாகூப் மேமன் தாக்கல் செய்திருந்த சீராய்வு மனுவை, வழக்கில் தொடர்புடைய அனைத்து நீதிபதிகளுக்கும் அனுப்பி வைக்கமல் எப்படி தள்ளுபடி செய்தீர்கள் என்று உச்ச நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.
 
மும்பை குண்டுவெடிப்பு வழக்கில், தூக்குத் தண்டனை விதிக்கப்பட்டுள்ள யாகூப் மேமன், உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்த ரிட் மனு, திங்களன்று விசாரணைக்கு வந்தது. உச்சநீதிமன்ற நீதிபதிகள் குரியன் ஜோசப் மற்றும் அனில் ஆர்.தவே அமர்வு, இம்மனுவை விசாரித்தது.
 
அப்போது, யாகூப் மேமன் உச்சநீதிமன்றத்தில் இதற்கு முன்பு தாக்கல் செய்த சீராய்வு மனுவுக்கான நீதிபதிகள் சேர்க்கையில் நடைமுறைக் குறைபாடு நிகழ்ந்துள்ளதாக நீதிபதி குரியன் ஜோசப் தெரிவித்தார்.
 
இது குறித்து குரியன் ஜோசப் கூறுகையில், “யாகூப் மேமனின் மனுவை விசாரணை செய்த நீதிபதிகள் அனைவருக்கும், ஏன் அவரது சீராய்வு மனு அனுப்பி வைக்கப்படவில்லை?” என்றும் கேள்வி எழுப்பினார்.
 
மேலும், தன்னுடைய இந்த கேள்வி “கனமான கேள்வி” என்று தெரிவித்த அவர், உச்சநீதிமன்ற விதிமுறைகள் தொகுப்பின் 48ஆம் எண் உத்தரவின் 14ஆம் விதியின்படி அனைத்து நீதிபதிகளுக்கும் சீராய்வு மனுஅனுப்பப்பட்டிருக்க வேண்டும்; அந்த வகையில் பார்க்கும்போது, தன்னையும், நீதிபதி செலமேஸ்வரையும் உச்சநீதிமன்ற அமர்வில் சேர்த்திருக்க வேண்டும் என்றும் கூறினார்.
 
மேலும், மேமனின் சீராய்வு மனுவை தள்ளுபடி செய்த அமர்வில், தற்போது இங்குள்ள அனில் ஆர்.தவே மட்டுமே இருந்துள்ளார் என்று குறிப்பிட்ட குரியன், சீராய்வு மனுவை விசாரிக்கும் நீதிபதிகள் நியமனத்தில் நடைமுறை தவறு நிகழ்ந்துள்ளது. இதை மத்திய அரசுகட்டாயம் கவனத்தில் கொள்ள வேண்டும் என்றார்.