செவ்வாய், 16 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Suresh
Last Updated : புதன், 18 நவம்பர் 2015 (11:04 IST)

சுப்பிரமணியன் சுவாமியை விட மிகப்பெரிய பொய்யரை யாரும் பார்த்திருக்க முடியாது: திக்விஜய் சிங்

சுப்பிரமணியன் சுவாமி மிகப்பெரிய பொய்யர் என்று காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளர் திக்விஜய் சிங் கூறியுள்ளார்.


 

 
கடந்த 2 நாட்களுக்கு முன்னர் பிரதமர் நரேந்திர மோடிக்கு பாஜகவின் மூத்த தலைவர்களுள் ஒருவரான சுப்பிரமணியன் சுவாமி கடிதம் ஒன்றை எழுதியிருந்தார்.
 
அந்தக் கடிதத்தில், "கடந்த 2003 ஆம் ஆண்டு ஆகஸ்டு 21 ஆம் தேதி இங்கிலாந்தில் உள்ள "பேக்கார்ஸ் லிமிடெட்" என்ற தனியார் நிறுவனத்தின் இயக்குனர் மற்றும் செயலாளராக இருந்தவர் தற்போதைய எம்.பி. ராகுல் காந்தி.
 
அவர் 2005 ஆம் ஆண்டு அந்த நிறுவனத்தின் ஆண்டறிக்கையில் தன்னை இங்கிலாந்து குடிமகன் என்றும், தனது லண்டன் முகவரியையும் கொடுத்துள்ளார்.
 
இதனால் அரசியல் சட்டத்தின் 9 ஆவது பிரிவின் படி, எந்த இந்திய குடிமகனும், தானாக எந்த வெளிநாட்டு குடியுரிமையும் பெற முடியாது.
 
எந்த எம்.பி.யும், முன் அனுமதி பெறாமல், வெளிநாட்டில் நிறுவனம் தொடங்க முடியாது. அது குறித்து வேட்பு மனுவிலும் குறிப்பிடாமல் இருக்கக்கூடாது.
 
ஆகவே ராகுல் காந்தியின் இந்திய குடியுரிமையையும், அவரின் எம்.பி. பதவியையும் பறிக்க உடனே ஆணையிட வேண்டும்" என்று அந்த கடிதத்தில் கூறியிருந்தார்.
 
இந்நிலையில், சுப்பிரமணியன் சுவாமியின் இந்த குற்றச்சாட்டிற்கு காங்கிரஸ் கட்சி மறுப்பு தெரிவித்திருந்தது.
 
இதுகுறித்து, மத்திய பிரதேசமாநிலம் இந்தூரில் காங்கிரஸ் கட்சியின் தேசிய பொதுச் செயலாளரும், டெல்லி மேல்சபை எம்.பி.யுமான திக்விஜய் சிங் செய்தியாளர்களிடம் கூறுகையில், "ராகுல் காந்தியின் இங்கிலாந்து குடியுரிமை பற்றி பேசிய சுப்பிரமணியன் சுவாமியின் கருத்தை காங்கிரஸ் கட்சி வன்மையாக கண்டிக்கிறது.
 
இந்த கருத்துகளுக்கு எல்லாம் ஊடகங்கள் முக்கியத்துவம் கொடுப்பது எனக்கு ஆச்சரியமாக உள்ளது. சுப்பிரமணியன் சுவாமியை விட மிகப்பெரிய பொய்யரை யாரும் பார்த்திருக்க முடியாது.
 
இவ்வாறு பொய் குற்றசாட்டுகளை கூறுவதை அவர் வழக்கமாகக் கொண்டுள்ளார். இதற்கு முன்னர் காங்கிரஸ் கட்சிக்கு எதிராக சில பொய்யான குற்றச்சாட்டுகளை அவர் கூறினார்.
 
அந்த குற்றச்சாட்டுகள் குறித்து அவர் ஆதாரம் ஏதும் வைத்துள்ளாரா? இது குறித்து நடவடிக்கை எடுக்க அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் தலைவி சோனியா காந்தியின் முடிவுக்கேவிட்டு விடுகிறோம்." என்று திக்விஜய் சிங் கூறினார்.