வெள்ளி, 29 மார்ச் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By வீரமணி பன்னீர்செல்வம்
Last Modified: வியாழன், 30 ஜூலை 2015 (09:01 IST)

ஜாதிவாரிக் கணக்கெடுப்புத் தரவுகளில் 8 கோடிக்கும் அதிகமான பிழைகள்: மத்திய அரசு

சமூக பொருளாதார மற்றும் ஜாதிவாரி கணக்கெடுப்பு 2014-ஐ வெளியிடுமாறு எதிர்கட்சிகள் வலியுறுத்தி வரும் நிலையில், கணக்கெடுப்பில் 8.19 கோடி பிழைகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.
 

 
இந்த 8.19 கோடி பிழைகளில் 1.45 கோடி தவறுகள் இன்னமும் திருத்தப்படாமல் உள்ளன.
 
இது குறித்து மத்திய உள்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “ஜாதி விவரங்களில் மொத்தம் 8,19,58,314 பிழைகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்கள் பிழைகளைத் திருத்த அறிவுறுத்தப்பட்டுள்ளன. திருத்தப்பட்ட பிறகும் தொடர்ந்து 1,45,77,195 பிழைகள் நீடித்துள்ளன. மாநிலங்கள் 6,73,81,119 பிழைகளை திருத்தியுள்ளது.
 
மொத்தம் 69.1 லட்சம் பிழைகளுடன் மகாராஷ்டிர மாநிலம் பிழைப்பட்டியலில் முதலிடம் வகிக்கிறது. மத்தியப் பிரதேச ஜாதித் தரவுகளில் தற்போது 13.9 லட்சம் பிழைகள் உள்ளன. மேற்கு வங்க தரவுகளில் 11.6 லட்சம் பிழைகளும், ராஜஸ்தான் தரவுகளில் 7.2 லட்சம் பிழைகளும், உ.பி. மாநில தரவுகளில் 5.4 லட்சம் பிழைகளும், கர்நாடாகா தரவுகளில் 2.9 லட்சம், பீகார் தரவுகளில் 1.7 லட்சம், மற்றும் தமிழக தரவுகளில் 1.4 லட்சம் பிழைகள் இன்னமும் திருத்தப்பட வேண்டியுளது என்று உள்துறை அமைச்சக அறிக்கை தெரிவிக்கிறது.
 
ஜாதிவாரி கணக்கெடுப்பை ஜூலை 16ஆம் தேதி ஆய்வு செய்த போது, 46 லட்சத்து 73 ஆயிரத்து 34 வேறுபட்ட ஜாதிப்பெயர்கள் திரும்பவும் வந்தன.
 
இதில் ஜாதி/ ஜாதிப்பிரிவு பெயர்கள், ஒரே அர்த்தமுடைய பெயர்கள், குடும்பப் பெயர்கள், குழு/கோத்ர பெயர்கள், ஒலிக்குறிப்பு மாறுபாடுகள், பிரிவுகள், துணைக்குழுக்கள் ஆகியவை அடங்கும். இதனை வகைபிரிக்க அந்தத் துறையில் நிபுணத்துவம் பெற்றவர்களால்தான் முடியும்.” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
 
ஜாதிவாரிக் கணக்கெடுப்பில் குறிப்பிடப்பட்டுள்ள ஜாதிகளை வகைபிரித்து பட்டியலிட அரவிந்த் பனாகாரியா என்பவரது தலைமையில் நிபுணர் குழுவை பிரதமர் அறிவித்துள்ளார்.
 
உள்துறை அமைச்சக அறிக்கையில் மேலும் “சமூக பொருளாதார ஜாதிவாரிக் கணக்கெடுப்பை பூர்த்தி செய்ய மத்திய அரசு முழுமூச்சுடன் செயல்பட்டு வருகிறது, மாநில அரசுகள் பிழைகளைத் திருத்து ஒத்துழைப்பு நல்குமாறு கேட்டுக் கொள்ளப்பட்டிருக்கின்றனர். இதற்கிடையே தற்போது திருத்தப்பட்ட தரவுகள் வகைபிரித்தலுக்காக நிபுணர்கள் குழுவிடம் அளிக்கப்படவுள்ளது” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.