வெள்ளி, 26 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By வீரமணி பன்னீர்செல்வம்
Last Modified: திங்கள், 24 நவம்பர் 2014 (18:10 IST)

மீண்டும் பிசிசிஐ தலைவர் பதவி கேட்பதா?: ஸ்ரீனிவாசன் மீது உச்ச நீதிமன்றம் கடும் சாடல்

பிசிசிஐ தலைவராக தன்னை உடனடியாக நியமிக்கக் கோரிய ஸ்ரீனிவாசனை, முத்கல் கமிட்டி அறிக்கையை வைத்துக் கொண்டு மீண்டும் தலைவர் பதவி கேட்பதா? என்று உச்ச நீதிமன்றம் கடுமையாக சாடியுள்ளது.
 
ஐபிஎல் சூதாட்டத்தில் தொடர்பு இருப்பதாக்க சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் உரிமையாளர்  ஸ்ரீனிவாசனின் மருமகன் குருநாத் மெய்யப்பன் மீது குற்றச்சாட்டு எழுந்ததைத் தொடர்ந்து, அது குறித்து விசாரணை நடத்த முகுல் முத்கல் கமிட்டி என்ற ஒன்றை உச்ச நீதிமன்றம் அமைத்தது. இதனையடுத்து விசாரணை முடிவடையும்வரை  ஸ்ரீனிவாசனை பிசிசிஐ தலைவராக பதவி வகிக்க தடை விதித்தது.
 
இந்நிலையில் முத்கல் கமிட்டி உச்ச நீதிமன்றத்தில் அண்மையில் தாக்கல் செய்த இறுதி விசாரணை அறிக்கையில், பிசிசிஐ தலைவராக இருந்த சீனிவாசன் மேட்ச் பிக்சிங் மற்றும் சூதாட்டத்தில் ஈடுபடவில்லை என்று கூறப்பட்டிருந்தது.
 
அதே சமயம்  ஸ்ரீனிவாசனும், இதர ஐபிஎல் அணி அதிகாரிகளும், பெயர் தெரிவிக்க விரும்பாத ஒரு விளையாட்டு வீரர், நடத்தை விதிகளுக்கு மாறாக நடந்துகொண்டதை மூடி மறைத்தனர் என்றும், இது குற்றம்தான் என்றும் அதில் கூறியிருந்தது. இந்நிலையில் முத்கல் கமிட்டியின் அறிக்கை அடிப்படையில் தம்மை மீண்டும் பிசிசிஐ தலைவராக நியமிக்கக் கோரி உச்ச நீதிமன்றத்தில் ஸ்ரீனிவாசன் மனுத்தாக்கல் செய்திருந்தார்.
 
இம்மனு இன்று விசாரணைக்கு வந்தபோது, ஸ்ரீனிவாசனின் கோரிக்கை தொடர்பாக நீதிபதிகள் சரமாரி கேள்வியெழுப்பினர்.
 
பிசிசிஐ தலைவராக உள்ளவர் ஐபிஎல் அணியின் உரிமையாளராக இருக்கலாமா? என்று கேள்வியெழுப்பிய நீதிபதிகள், பிசிசிஐ மற்றும் ஐபிஎல் ஆகியவற்றை வேறுபடுத்தி பார்க்கமுடியவில்லை என்று கூறினர்.
உங்கள் அணியில் உள்ள உறுப்பினரே ( குருநாத் மெய்யப்பன்) பெட்டிங்கில் ஈடுபட்டுள்ளார். அவர் மீது நீங்கள் எடுத்த நடவடிக்கை என்ன? இதற்கு நீங்கள் பதிலளிக்க வேண்டும். ஏனெனில் பிசிசிஐ தலைவர் பதவியின் கவுரவத்தை இது பாதிக்கும் என்றும் கடுமையாக சாடிய நீதிபதிகள், முத்கல் கமிட்டி அறிக்கையை வைத்துக்கொண்டு இனிமேல் பிசிசிஐ தலைவராக நியமிக்க அனுமதிக்க வேண்டும் என்ற கோரிக்கையுடன் வராதீர்கள் என்றும் காட்டமாக கூறினர்.
 
முத்கல் அறிக்கையில் குற்றஞ்சாட்டப்பட்ட நபர்கள் மீது நீங்கள் நடவடிக்கை எடுத்தே ஆக வேண்டும். அதை தவிர உங்களுக்கு வேறு வழியில்லை என்றும் வலியுறுத்திய நீதிபதிகள்,  பிசிசிஐ தலைவராக  ஸ்ரீனிவாசனை நியமிக்கும் விஷயத்தில்  அனைத்து தரப்பினரின் கருத்தை கேட்டபின்பே இறுதி முடிவு எடுக்கப்படும் என்றும் திட்டவட்டமாக கூறி, வழக்கை ஒத்திவைத்தனர்.