செவ்வாய், 23 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Suresh
Last Updated : சனி, 2 ஆகஸ்ட் 2014 (12:07 IST)

சோனியா காந்தி 2 ஆண்டு பதவியைத் துறப்பது நல்லது: காங்கிரஸ் மூத்த தலைவர்

சோனியா காந்தி 2 ஆண்டு பதவியைத் துறப்பது நல்லது என்று காங்கிரஸ் கட்சியின் அகில இந்திய பொதுச் செயலாளர்களில் ஒருவரான ஜக்மித் சிங் பிரார் கூறியுள்ளார்.

காங்கிரசின் வீழ்ச்சிக்கு சோனியாவின் அணுகு முறை முக்கியக் காரணம் என்று காங்கிரஸ் நிர்வாகிகளே குற்றச் சாட்டுக்களை வெளியிட்டு வருகிறார்கள். இது சோனியா, ராகுல்காந்தியிடம் கடும் அதிர்ச்சியையும், அதிருப்தியையும் ஏற்படுத்தி உள்ளது.

இந்நிலையில் காங்கிரஸ் முன்னாள் காரியக்கமிட்டி உறுப்பினரும், அகில இந்திய பொதுச் செலயாளர்களில் ஒருவருமான ஜக்மித் சிங் பிரார் சோனியா, ராகுல் மீது விமர்சனத்தை கிளப்பியுள்ளார்.

இது குறித்து அவர் கூறியதாவது:–

“நாடாளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் படுதோல்வி அடைந்ததற்கு தார்மீக பொறுப்பு ஏற்று சோனியா, ராகுல் இருவரும் அவர்களது ஆதரவாளர்களும் பொறுப்புகளில் இருந்து விலக வேண்டும்.

காங்கிரஸ் தலைவர் பதவியை வேறு ஒருவரிடம் ஒப்படைத்து விட்டு, சோனியா 2 ஆண்டுகளாவது பதவியை துறந்து இருப்பது நல்லது. சோனியா, ராகுல் இருவரும் காங்கிரஸ் நிர்வாகத்தில் இருந்து சற்று விலகி இருப்பதால் காங்கிரஸ் பேரியக்கத்துக்கு எந்தவித பாதிப்பும் வந்து விடப் போவதில்லை.

மாறாக புதிய உத்வேகம் கிடைக்கும். அதன்பிறகு சோனியா, ராகுல் மீண்டும் கட்சிப் பணிகளில் ஈடுபடலாம். இப்படி செய்தால்தான் மாநில காங்கிரஸ் நிர்வாகிகளிடம் சோனியா, ராகுல் மீது நம்பிக்கை பிறக்கும்.

மேலும் காங்கிரஸ் தோல்வி பற்றி ஏ.கே.அந்தோணி தலைமையிலான குழு ஆய்வு செய்து அறிக்கை கொடுத்துள்ளது. அதில் உள்ள பரிந்துரைகளை ஏற்று நடவடிக்கைகள் எடுத்தால் கட்சியில் மேம்பாடு ஏற்படும்“. என்று ஜக்மித் சிங் பிரார் தெரிவித்துள்ளார்.