செவ்வாய், 23 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Ilavarasan
Last Modified: வெள்ளி, 21 நவம்பர் 2014 (17:34 IST)

நிவாரணப் பணிகளில் அரசியல் ஆதாயத்துடன் செயல்படுகிறது பாஜக - சோனியா காந்தி

ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் வெள்ளப்பெருக்கால் பாதிப்படைந்த மக்களுக்கு நிவாரணப் பணிகளை மேற்கொள்வதில் மத்தியல் ஆளும் பாஜக அரசியல் ஆதாயத்துடன் செயல்படுகிறது என்று காங்கிரஸ் தலைவி சோனியா காந்தி குற்றம்சாட்டினார்.
 
சட்டப்பேரவைத் தேர்தலை முன்னிட்டு காங்கிரஸ் வேட்பாளர் உஸ்மான் மஸ்ஜித்தை ஆதரித்து பந்திபோராவில் சோனியா காந்தி மேலும் பேசியதாவது:
 
வெள்ளப்பெருக்கால் மக்கள் பாதிப்படைந்துள்ள நிலையில் மாநிலத்தில் பேரவைத் தேர்தல் நடைபெறவுள்ளது. மாநிலத்தில் நிவாரணப் பணிகள் மிகவும் தாமதமாக நடைபெறுகின்றன.
 
2005  இல் நிலநடுக்கத்தால் பாராமுல்லா உள்ளிட்ட பல்வேறு பகுதிகள் பாதிப்படைந்தபோது மத்தியில் ஆட்சி செய்த காங்கிரஸ் அரசு பாதிப்படைந்த மக்களுக்கு அனைத்து உதவிகளையும் செய்தது.
 
ஆனால், தற்போது மத்தியில் பாஜக ஆட்சியில் என்ன நடந்தது? ஜம்மு-காஷ்மீர் அரசு நிவாரணம் வழங்க ரூ.44,000 கோடி ஒதுக்கீடு செய்யுமாறு மத்திய அரசிடம் கோரியது.
 
ஆனால், அக்டோபர் 23ஆம் தேதி வெள்ளத்தால் பாதிப்படைந்த பகுதிகளைப் பார்வையிட்ட பிரதமர் நரேந்திரமோடி வெறும் ரூ.745 கோடி மட்டுமே அறிவித்தார்.
 
அனைத்துக் காலங்களிலும் காஷ்மீர் மக்களுடன் காங்கிரஸ் நெருங்கிய உறவுடன் இருந்து வருகிறது. எனது குடும்பத்தினர் காஷ்மீரை சேர்ந்தவர்கள் என்பதால் நான் இங்கே அடிக்கடி வந்து செல்கிறேன்.
 
மத்தியில் காங்கிரஸ் ஆட்சி செய்தபோது, 2011இல் "உல்லார் அழகுப்படுத்தும் திட்டம்', ஒரு புதிய விமான ஓடுதளம் உள்ளிட்ட திட்டங்கள் நிறைவேற்றப்பட்டன. மாநிலத்தில் மதசார்பின்மை நிலவவும், அவை பாதுகாக்கப்படவும் காங்கிரசுக்கு வாக்களியுங்கள் என்று சோனியா காந்தி தெரிவித்தார்.