ஸ்நாப்டீல் பெண் ஊழியர் தீப்தி சர்னா கடத்தல்: 5 பேரை கைது செய்த காவல்துறையினர்


Suresh| Last Modified திங்கள், 15 பிப்ரவரி 2016 (11:13 IST)
ஸ்நாப்டீல் நிறுவனத்தின் பெண் ஊழியர் தீப்தி சர்னா கடந்தப்பட்ட விவகாரத்தில் காவல்துறையினர் 5 பேரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

 


உத்தர பிரதேச மாநிலம் காசியாபாத்தில் உள்ள பிரபல தனியார் ஆன்லைன் வர்த்தக நிறுவனமான "ஸ்னாப்டீல்" நிறுவனத்தில் சட்டத்துறையில் அதிகாரியாக பணியாற்றி வருபவர் தீப்தி சர்னா.
 
இவர் கடந்த 10 ஆம் தேதி பணி முடிந்து வீட்டுக்கு திரும்பிக்  கொண்டிருந்தபோது ஆட்டோவில் இருந்த 4 பேர் அவரை கத்திமுனையில் கடத்திச் சென்றனர்.
 
இது குறித்து காசியாபாத் காவல்துறையினருக்குத் தகவல் கொடுக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து, காவல்துறையினர் தீப்தியை தீவிரமாக தேடி வந்தனர்.
 
இந்நிலையில், அவர் கடந்த  வெள்ளிக்கிழமை பத்திரமாக வீடு திரும்பினார். ஆனால், அவர் காணாமல் போனது குறித்தும், பின்னர் வீடு திரும்பியது தொடரபாகவும் மர்மம் நீடித்து வந்தது.
 
இந்த வழக்கு தொடர்பாக 5 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
 
அவர்களிடம் இந்த கடத்தல் தொடர்பாக தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருகின்றது. இந்த விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

webdunia

இதில் மேலும் படிக்கவும் :