வியாழன், 25 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Ilavarasan
Last Modified: திங்கள், 18 ஆகஸ்ட் 2014 (20:35 IST)

கஞ்சா போதை போதாமல் பாம்புகடி போதைக்கு அடிமையான கேரள வாலிபர்: திடுக்கிடும் தகவல்கள்

கேரள மாநிலத்தில் கஞ்சா போதை போதாமல் பாம்பு கடி போதை பழக்கத்திற்கு அடிமையான வாலிபரை காவல்துறையினர் கைது செய்தனர்.
 
கேரள மாநிலம் கொல்லம் பகுதியில், ஒரு கும்பல் ரகசியமாக கஞ்சா விற்பனை செய்வதாக கொல்லம் கலால் துறையினருக்கு  ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து கொல்லம் பகுதியில் மாறுவேடத்தில் ரகசியமாக கண்காணித்து வந்தனர். கொல்லம் கேரளபுரத்தில் ஒரு வாலிபரை பிடித்து விசாரித்தனர். அப்போது அவரிடம் ஒரு பொட்டலம் கஞ்சா இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. வாலிபரை அதிகாரிகள் கைது செய்தனர். அவர் கேரளபுரம் பலாவிளை பகுதியை சேர்ந்த மாஹின்ஷா (19) என்பது தெரியவந்தது. விசாரணைக்காக அவரை கொல்லம் கலால்துறை அலுவலகத்துக்கு கொண்டு சென்ற போது, திடீரென மாஹின்ஷா மயங்கி விழுந்தார். இதையடுத்து கலால் துறையினர் நேற்று முன்தினம் கொல்லம் அரசு மருத்துவமனையில் அவரை அனுமதித்தனர். 
 
வாலிபருக்கு மறுநாள் காலை தான் மயக்கம் தெளிந்தது. பின்னர் விசாரித்த போது, பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் தெரிய வந்தன. கடந்த சில வருடங்களாக மாஹின்ஷா போதைக்காக கஞ்சா பயன்படுத்தி வருகிறார். கஞ்சா போதை அலுத்து போனதால் கூடுதல் போதைக்காக என்ன செய்யலாம் என இன்டர்நெட்டில் தேடி பார்த்துள்ளார். சில நாடுகளில் பாம்பு கடி போதை பயன்படுத்துவது தெரியவந்தது. இதையடுத்து, கேரளாவில் பாம்புகடி போதை கிடைக்குமா என்று விசாரித்தார். பேஸ்புக் மூலம் தேடி பார்த்ததில் கொச்சியில் டோனி என்பவர் இந்த பாம்பு கடி போதையை பயன்படுத்தி வருவது தெரியவந்தது. இதையடுத்து மாஹின்ஷா கொச்சி சென்று டோனியிடம் பாம்பு கடி போதையை பயன்படுத்தி வந்தார். பாம்பு கடி போதைக்கு என்ன செய்வார்கள் என்பது குறித்து வாலிபர் கூறியுள்ள தகவல்கள் காவல்துறையினரை அதிர்ச்சியடைய வைத்துள்ளது.
 
100 மில்லி பாட்டில் ஒன்றில் குட்டி விஷப் பாம்பு போடப்பட்டிருக்குமாம். நாக்கின் அடியில் பாட்டிலை வைத்து மூடியை திறப்பார்கள். பாம்பு வெளியே வந்து கொத்திய சில நிமிடங்களில் போதை தலைக்கேறி மயக்கம் வந்து விடுமாம். 4 நாட்கள் வரை என்ன நடப்பது என்றே தெரியாமல் போதை இருக்கும் என வாலிபர் கூறியுள்ளார். ஒரு முறை பாம்பு கடி போதைக்கு ரூ.1000 வசூலிப்பதாகவும், பல இளைஞர்கள் பாம்பு கடி போதையை பயன்படுத்துவதாகவும் மாஹின்ஷா கூறியுள்ளார். விசாரணைக்கு பின்னர் கலால் துறையினர் வாலிபரை கொல்லம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.