வெள்ளி, 29 மார்ச் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By K.N.Vadivel
Last Updated : ஞாயிறு, 28 ஜூன் 2015 (05:55 IST)

மேற்கு வங்கத்திலிருந்து, பூடானுக்குக் கடத்த முயன்ற ரூ.100 கோடி பாம்பு விஷம் பறிமுதல்: 6 பேர் கைது

மேற்கு வங்காளத்திலிருந்து, பூடானுக்கு பாம்பு விஷத்தை கடத்திய 6 பேரை வனத்துறையினர் கைது செய்தனர். அவர்களிடமிருந்த ரூ.100 கோடி பாம்பு விஷத்தை பறிமுதல் செய்தனர்.
 

 
பாம்பு என்றால் படையும் நடுங்கும் என்பது பழமொழி. ஆனால் அந்த பாம்பில் இருந்து எடுக்கப்படும் விஷம் பல அரியவகை நோய்களை குணப்படுத்துகிறது என விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர்.
 
இது குறித்து ஜப்பான் யமனாஷி பல்கலைக்கழக பேராசிரியர் காட்சூ சுசுகி - இனோயூ தலைமையில் விஞ்ஞானிகள் ஆராய்ச்சி மேற்கொண்ட போது, பாம்பின் விஷம் மாரடைப்பு, வலிப்பு மற்றும் கேன்சர் போன்ற மிகக் கொடுமையான நோய்களைக்கூட குணப்படுத்தும் தன்மை கொண்டது என தெரிய வந்தது.
 
மேலும், பாம்பின் விஷம் நச்சுத் தன்மை வாய்ந்தது. அதில் பலவிதமான புரோட்டீன்கள் உள்ளன. அவை இந்த நோய்களை உருவாக்கும் கிருமிகளை அழித்து குணப்படுத்துகின்றன என்று தெரிவித்துள்ளனர். இதனால் பாம்பு விஷத்துக்கு சர்வதேச சந்தையில் கடும் கிராக்கி நிலவுகிறது. இதற்காக சில சமூக விரோதிகள், பாம்புகளை பிடித்து அதன் விஷத்தை எடுத்து கடத்தி விற்பனை செய்து வருகின்றனர்.
 
இந்நிலையில், மேற்கு வங்க மாநிலம், ஜல்பாய்குரி மாவட்டத்துக்கு உட்பட்ட பெலகோபா பகுதியில், 3 மோட்டார் சைக்கிள்களில் சென்று கொண்டிருந்த 6 பேரை  வனத்துறையினர் சோதனை செய்தனர்.
 
அப்போது, அவர்கள் வைத்திருந்த பைகளில், பாம்பு விஷத்தை பாத்திரத்தில் மறைத்து வைத்திருந்தது தெரிய வந்தது. அவர்களிடம் நடத்திய விசாரணையில், பையில் இருந்த விஷம் பூடானுக்கு கடத்துவதற்காக   வைத்திருந்தது தெரிய வந்தது. இதனையடுத்து, அவர்கள் 6 பேரையும் வனத்துறையினர் கைது செய்தனர். மேலும், அவர்களிடமிருந்து சுமார் ரூ.100 கோடி மதிப்புள்ள பாம்பு விஷத்தை பறிமுதல் செய்தனர்.