வியாழன், 18 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By லெனின் அகத்தியநாடன்
Last Modified: திங்கள், 30 நவம்பர் 2015 (16:26 IST)

'ஜனநாயகம்’ குறித்து அமெரிக்க அதிபர் ஒபாமாவிற்கு பதிலடி கொடுத்த சீதாராம் யெச்சூரி

பழமையான ஜனநாயக நாடு என்று அமெரிக்காவை குறிப்பிட்டதை மறுத்து, இந்தியாதான் பழமையான ஜனநாயக நாடு என்று ஒபாமாவிடம் சுட்டிக்காட்டியதை சீதாராம் யெச்சூரி நாடாளுமன்றத்தில் நினைவுபடுத்தியுள்ளார்.
 

 
இது குறித்து நாடாளுமன்றத்தில் உரையாற்றிய சீதாராம் யெச்சூரி, “அமெரிக்க ஜனாதிபதி ஒபாமா இங்கே வந்த போது, நாடாளுமன்ற மைய மண்டபத்தில் உரை நிகழ்த்தினார். அவர் நாடாளுமன்றத்தில் உள்ள பார்வையாளர்கள் புத்தகத்தில் என்ன எழுதினார்?
 
“உலகின் மிகவும் பழைமையான ஜனநாயக நாட்டிலிருந்து, உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாட்டிற்கு வாழ்த்துக்கள்’’ என்று எழுதியிருந்தார். இது அவர் அளித்த செய்தி.
 
மாலையில் குடியரசுத் தலைவர் மாளிகையில் அவருக்கு விருந்து அளிக்கப்பட்ட சமயத்தில் அவரிடம் இதை நான், “நீங்கள் உங்கள் நாட்டை பழைமையான ஜனநாயக நாடு என்று வரையறுத்திருப்பது தவறு,’’ என்று சுட்டிக்காட்டினேன்.
 
அவர், “ஏன்?’’ என்று கேட்டார். நான் அவரிடம், “நீங்கள் உங்கள் நாட்டில் அமெரிக்கர்கள் - ஆப்பிரிக்கர்கள் - அனைவருக்கும் 1962இல்தான் வாக்களிக்கும் உரிமையை அளித்தீர்கள். அதாவது நீங்கள் பிறந்து ஓராண்டு கழிந்த பின்னர்தான். ஆனால், நாங்கள் அதனை 1950இலேயே கொடுத்திருக்கிறோம்” என்று கூறியதை நினைவு கூர்ந்துள்ளார்.
 
மேலும் அவர் கூறுகையில், “ஆனால், இன்றைய நிலைமை என்ன? ஹரியானா மாநிலத்தில் 86 சதவீத மக்களுக்கு வாக்குரிமை, தேர்தலில் போட்டி போடும் உரிமை மறுக்கப்பட்டிருக்கிறது. ராஜஸ்தானில், மக்கள் தொகையில் பாதிக்கும் மேற்பட்டவர்கள் வாக்குரிமை இன்றி இருக்கிறார்கள்.
 
குஜராத் குறித்து நீங்கள் என்ன கூறியிருக்கிறீர்கள்? உங்கள் வீட்டில் கழிப்பறை வசதி இல்லையேல், உங்களுக்கு வாக்குரிமை கிடையாது, தேர்தலில் போட்டி போட முடியாது என்று கூறியிருக்கிறீர்கள்.
 
இவை அனைத்தும் பாஜக ஆளும் மாநில அரசாங்கங்கள். நீங்கள் இங்கே வந்து அம்பேத்கருக்கு அஞ்சலி செலுத்துகிறீர்கள். இந்திய அரசமைப்புச் சட்டத்தின் முக்கிய அம்சமே அனைவருக்கும் வாக்குரிமை என்பதாகும்.
 
அதனை உங்கள் பாஜக அரசு மறுத்து வருகிறது. (அப்போது மணியடிக்கப்பட்டது) நீங்கள் மணி அடிப்பீர்கள் எனத் தெரியும். ஆளும் கட்சியின் அமரும் இருக்கைகள் அனைத்தும் அநேகமாகக் காலியாக இருக்கின்றன. அதிகாரிகள் அமரும் இருக்கைகள் கூட காலி.
 
நாங்கள் கூறுவதை யார் அரசுக்கு எடுத்துச்செல்வார்கள் என்று எனக்குத் தெரியவில்லை” என்று தெரிவித்துள்ளார்.