வியாழன், 28 மார்ச் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By வீரமணி பன்னீர்செல்வம்
Last Modified: திங்கள், 20 ஏப்ரல் 2015 (10:59 IST)

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் பொதுச்செயலாளராக சீதாராம் யெச்சூரி போட்டியின்றி தேர்வு

விசாகப்பட்டினத்தில் நடந்த மாநாட்டில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் புதிய பொதுச்செயலாளராக சீதாராம் யெச்சூரி போட்டியின்றி ஒருமனதாக தேர்ந்து எடுக்கப்பட்டார்.
 

 
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் 21வது மாநாடு ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் நடந்து வந்தது. இதில் கட்சி வளர்ச்சி பணிகள், எதிர்கால திட்டங்கள் உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் குறித்து விரிவாக ஆலோசிக்கப்பட்டது. மாநாட்டின் இறுதி நாளான நேற்று பொதுச்செயலாளர் தேர்தல் நடைபெற்றது.
 
பொதுச்செயலாளர் பதவிக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மூத்த தலைவரும் அக்கட்சியின் டெல்லி மேல்-சபை உறுப்பினருமான சீதாரம் யெச்சூரிக்கும், கேரளாவைச் சேர்ந்த எஸ்.ராமச்சந்திரன் பிள்ளைக்கு இடையே போட்டி நிலவுவதாக தகவல் வெளியானது.
 
இதுபற்றி எஸ்.ராமச்சந்திரன் பிள்ளையிடம் நேற்று முன்தினம் செய்தியாளர்கள் கேட்டதற்கு, பொதுச்செயலாளர் பதவிக்கான வேட்பாளர் யார் என்பதை கட்சிதான் தீர்மானிக்கும் என்றார்.
 
இந்த நிலையில், நேற்று நடைபெற்ற இறுதி நாள் மாநாட்டில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் புதிய பொதுச்செயலாளராக சீதாராம் யெச்சூரி போட்டியின்றி ஒருமனதாக தேர்ந்து எடுக்கப்பட்டார்.
 
அவரது பெயரை இதுவரை பொதுச்செயலாளராக இருந்து வந்த பிரகாஷ் காரத் முன்மொழிந்தார். எஸ்.ராமச்சந்திரன் பிள்ளை வழிமொழிந்தார்.
 
மேலும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மத்திய குழுவுக்கு 91 உறுப்பினர்களும், ஆட்சிமன்ற குழுவுக்கு (பொலிட்பீரோ) சீதாராம் யெச்சூரி, பிரகாஷ் கரத், எஸ்.ராமச்சந்திரன் பிள்ளை, பிமன் சர்க்கார், மாணிக் சர்க்கார் உள்பட 16 உறுப்பினர்களும் தேர்வு செய்யப்பட்டனர்.
 
பொதுச்செயலாளராக தேர்ந்து எடுக்கப்பட்ட சீதாராம் யெச்சூரிக்கு கட்சியின் மற்ற தலைவர்கள் வாழ்த்து தெரிவித்தனர்.
 
பின்னர் சீதாராம் யெச்சூரி செய்தியாளர்களிடம் பேசுகையில், இடதுசாரிகள் மற்றும் ஜனநாயக சக்திகளை ஓரணியில் திரட்டி ஜனநாயகத்தை பலப்படுத்த வேண்டிய அவசியம் ஏற்பட்டு இருப்பதாகவும், அதற்கு வழிவகுப்பதாக இந்த மாநாடு அமைந்துள்ளது என்றும் தெரிவித்தார்.
 
மத்தியில் உள்ள மோடி அரசு மதவாதம், பாதகமான தாராளமய பொருளாதார கொள்கை, ஜனநாயக நடைமுறைகளுக்கு பங்கம் விளைவிக்கும் போக்கு ஆகியவற்றை கடைபிடிப்பதாக அப்போது குற்றம் சாட்டிய அவர், இதனால் தேசத்துக்கு பாதிப்பு ஏற்படாமல் தடுக்க வேண்டும் என்றும் கூறினார்.
 
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் 5வது பொதுச்செயலாளர் ஆகி இருக்கும் சீதாராம் யெச்சூரிக்கு 62 வயது ஆகிறது. 1952ஆம் ஆண்டு ஆகஸ்டு 12ஆம் தேதி சென்னையில் பிறந்த இவர் ஹைதராபாத்தில் பள்ளிப்படிப்பை முடித்த பின் டெல்லி சென்று அங்குள்ள செயிண்ட் ஸ்டீபன்ஸ் கல்லூரியில் பொருளாதார பட்டப்படிப்பை முடித்தார். பின்னர் ஜவகர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் முதுகலை பட்டம் பெற்றார். அங்கு படித்துக் கொண்டிருந்த சமயத்தில், நாட்டில் நெருக்கடி நிலை அமல்படுத்தப்பட்ட போது கைது செய்யப்பட்டார். ஜவகர்லால் நேரு பல்கலைக்கழக மாணவர்கள் சங்க தலைவராக 3 முறை தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
 
1985ஆம் ஆண்டு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மத்திய குழு உறுப்பினராக தேர்வு செய்யப்பட்ட அவர், பின்னர் 1992ஆம் ஆண்டில் ஆட்சி மன்ற குழு உறுப்பினர் ஆனார். 2005ஆம் ஆண்டு டெல்லி மேல்-சபை உறுப்பினராக தேர்ந்து எடுக்கப்பட்டார்.