வெள்ளி, 29 மார்ச் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By வீரமணி பன்னீர்செல்வம்
Last Modified: திங்கள், 25 ஆகஸ்ட் 2014 (16:41 IST)

ராஜ்நாத் சிங்குடன் ஷீலா தீட்சித் திடீர் சந்திப்பு: கேரள ஆளுநர் பதவி ராஜினாமா?

கேரள மாநில ஆளுநர் ஷீலா தீட்சித், மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்கை இன்று திடீரென சந்தித்துப்பேசியுள்ள நிலையில், அவர் தனது பதவியை ராஜினாமா செய்யக்கூடும் என தகவல் வெளியாகியுள்ளது.
 
கடந்த மே 26 ஆம் தேதியன்று மத்தியில் நரேந்திர மோடி தலைமையிலான அரசு பதவியேற்றதிலிருந்தே, முந்தைய காங்கிரஸ் அரசால் நியமிக்கப்பட்ட மாநில ஆளுநர்களுக்கு ராஜினாமா செய்யுமாறு மறைமுக நெருக்கடி கொடுக்கப்பட்டது.
 
இதனையடுத்து 7 மாநில ஆளுநர்கள் ராஜினாமா செய்த நிலையில், ஷீலா தீட்சித் உள்ளிட்ட ஒரு சில ஆளுநர்கள் ராஜினாமா செய்ய முடியாது என மறுப்பு தெரிவித்து வந்தனர்.
 
இந்நிலையில், கேரள மாநில ஆளுநர் ஷீலா தீட்சித், மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்கை இன்று திடீரென சந்தித்துப்பேசியுள்ளார். இந்த சந்திப்பு குறித்த தகவல் மத்திய உள்துறை அமைச்சகத்தின் ட்விட்டர் தளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.
 
மிசோரம் மாநில ஆளுநராக நியமிக்கப்பட்ட சங்கரநாராயணன் தனது பதவியை ராஜினாமா செய்துள்ள 24 மணி நேரத்தில் ஷீலா தீட்சித்தின் இந்த சந்திப்பு, அவரும் சங்கர நாராயணனை பின்பற்றி ஆளுநர் பதவியை ராஜினாமா செய்யக்கூடும் என்ற யூகத்தை ஏற்படுத்தியுள்ளது.
 
இதனிடையே, மகாராஷ்டிரா, கர்நாடகா, ராஜஸ்தான் மற்றும் கோவா ஆகிய மாநிலங்களுக்கு இன்று புதிய ஆளுநர்கள் நியமிக்கப்படலாம் என்று தகவல் வெளியாகியுள்ளது.