1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Ilavarasan
Last Updated : செவ்வாய், 24 மார்ச் 2015 (13:29 IST)

சமூகவலைதளங்களில் கருத்து சுதந்திரத்திற்கு தடை இல்லை: உச்ச நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு

மிகவும் எதிர்பார்க்கப்பட்ட கருத்து சுதந்திரம் தொடர்பான வழக்கில், சட்டப் பிரிவு 66-ஏ என்பது அரசியல் சாசனத்துக்கு எதிரானது என உச்ச நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு வழங்கியுள்ளது.
 
சமூக வலைதளங்களான பேஸ்புக், ட்விட்டர் உள்ளிட்ட பக்கங்களில் வெளியிடப்படும் கருத்துகள், விமர்சனங்கள் அவதூறாக இருந்தால் சம்பந்தப்பட்டவரை கைது செய்ய வழிவகை செய்யும் தகவல் தொழில்நுட்ப சட்டப் பிரிவு 66ஏ முறையானதுதானா என்பது தொடர்பான வழக்கில் உச்ச நீதிமன்றம் இன்று (செவ்வாய்கிழமை) இத்தீர்ப்பை வழங்கியுள்ளது.
 
இந்தியாவில் சுதந்திரமாக கருத்துகளை தெரிவிக்கவும் வெளியிடவும் பேச்சுரிமை வழங்கப்பட்டுள்ளது. ஆனால் கடந்த 2000-வது ஆண்டு தகவல் தொழில்நுட்பச் சட்டம் பிரிவு 66ஏ மற்றும் அதில் 2009-ம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட திருத்தங்களின்படி, சுதந்திரமாக கருத்துகள் வெளியிட தடை விதிக்கப்பட்டது.
 
இச்சட்டப் பிரிவின் கீழ் கைது செய்யப்படும் நபருக்கு மூன்று ஆண்டுகள் வரை சிறைத் தண்டனை வழங்க வாய்ப்பிருந்தது.
 
இந்நிலையில் இந்த வழக்கில் இன்று தீர்ப்பளித்த நீதிபதிகள், "சமூக வலைதளங்களில் வெளியிடப்படும் கருத்துகள், விமர்சனங்கள் அவதூறாக இருந்தால் தொடர்புடையவரை கைது செய்ய வழிவகை செய்யும் சட்டப் பிரிவு 66-ஏ , அரசியல் சாசனத்துக்கு எதிரானது. பொதுமக்களின் கருத்துச் சுதந்திரத்தை நேரடியாகப் பறிப்பதாகவே இது உள்ளது.
 
மேலும் இச்சட்டப்பிரிவில் உள்ள சில வார்த்தைகள் பொதுப்படையாக இருப்பது ஏற்புடையதல்ல. ஒருவருக்கு அவதூறாக தெரியும் விஷயம், மற்றவருக்கு அவதூறாக இல்லாமல் இருக்கலாம். எனவே இச்சட்டப்பிரிவு அரசியல் சாசனத்துக்கு எதிரானது. எனவே தகவல் தொழில்நுட்ப சட்டப் பிரிவு 66-ஏ ரத்தாகிறது" என நீதிபதிகள் தெரிவித்தனர்.