1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Bharathi
Last Modified: வியாழன், 24 செப்டம்பர் 2015 (15:56 IST)

சோம்நாத் பாரதியின் முன்ஜாமீன் மனுவை ஏற்றது உச்சநீதிமன்றம்: திங்கள் கிழமை விசாரணை

தலைமறைவாக இருக்கும் ஆம் ஆத்மி கட்சியின் மூத்த தலைவர் சோம்நாத் பாரதி தாக்கல் செய்த முன்ஜாமீன் மீதான விசாரணை உச்சநீதிமன்றத்தில் திங்கள் கிழமை நடைபெற உள்ளது. 


 


அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையிலான அமைச்சரவையில் சட்டஅமைச்சராக பதவி வகித்தவர் சோம்நாத் பாரதி. இவருக்கும் லிபிகா மித்ரா என்பவருக்கும் கடந்த 2010 ஆம் ஆண்டு திருமணம் நடைபெற்றது.

பின்னர் கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் பிரிந்தனர். இதனிடையே தனது கணவர் சோம்நாத் பாரதி தன்னை கடுமையாக தாக்கியதாக டெல்லி காவல்நிலையத்தில் புகார் அளித்தார்.
 
வழக்கு விசாரணைக்கு நேரில் ஆஜராகும் படி சோம்நாத் பாரதிக்கு  போலீசார் சம்மன் அனுப்பினர். ஆனால் விசாரணைக்கு ஆஜராகாத சோம்நாத் பாரதி தொடர்ந்து தலைமறைவாக உள்ளார்.
 
இந்நிலையில் சோம்நாத் பாரதிக்கு ஜாமீனில் வெளிவர முடியாத பிடிவாரண்ட்டை நீதிமன்றம் அண்மையில் பிறப்பித்தது. இதனைத் தொடர்ந்து முன்ஜாமீன் கோரி சோம்நாத் தரப்பில் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.
 
சோம்நாத் பாரதி தாக்கல் செய்த மனுவை  ஏற்றுக் கொண்ட நீதிமன்றம், இந்த மனு மீதான விசாரணை திங்கள் கிழமை நடைபெறும் என்று அறிவித்துள்ளது.