செவ்வாய், 23 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Ilavarasan
Last Modified: புதன், 22 அக்டோபர் 2014 (10:43 IST)

தேர்தல் வராமல் இருந்திருந்தால் மோடியின் ஸ்ரீநகர் தீபாவளி சிறப்பாக இருந்திருக்கும் - சசி தரூர்

சமீபத்தில் பிரதமர் மோடியை பாராட்டியதற்காக கட்சியின் கோபத்திற்குள்ளான காங்கிரஸ் எம்.பி. சசி தரூர், வரும் 23 ஆம் தேதி கொண்டாடப்படவுள்ள தீபாவளி பண்டிகையை ஸ்ரீநகரில் செலவிட போவதாக மோடி அறிவித்ததை ஏற்றுக்கொள்ள மறுத்துள்ளார்.


 
 
காஷ்மீர் மாநிலத்தில் கடந்த 60 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு, கடந்த மாதம் பெருமழை பெய்தது. இதனால் அந்த மாநிலமே வெள்ளக்காடாக மாறியது. 150 க்கும் மேற்பட்டோர் பலியாகினர். இந்த நிலையில், இந்த ஆண்டு தீபாவளி பண்டிகையை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள காஷ்மீர் மக்களுடன் கொண்டாடுவதற்கு பிரதமர் நரேந்திர மோடி முடிவு செய்துள்ளார்.
 
இந்த தீபாவளி பண்டிகையை காஷ்மீர் மக்களுடன் கொண்டாடும் வகையில், அதன் கோடை கால தலைநகரான ஸ்ரீநகருக்கு பிரதமர் நரேந்திர மோடி செல்கிறார். இதை அவர் டுவிட்டர் சமூக வலைத்தளத்தில் அறிவித்துள்ளார். இது குறித்து அதில் அவர், 23 ஆம் தேதி தீபாவளி பண்டிகையன்று ஸ்ரீநகரில் இருப்பேன். இந்த நாளை துரதிர்ஷ்டமான வெள்ளத்தால் பாதித்த நமது சகோதர, சகோதரிகளுடன் செலவிடுவேன் என குறிப்பிட்டுள்ளார்.
 
இந்த நிலையில், மோடியின் திட்டம் குறித்து தனது டிவிட்டர் தளத்தில் சசி தரூர் தெரிவித்துள்ளதாவது:- ஸ்ரீநகர் ஒரு நல்ல ஆலோசனை. ஆனால் அங்கு தேர்தல் வராமல் இருந்தால் இன்னும் சிறப்பாக இருந்திருக்கும் என்று தெரிவித்துள்ளார்.
 
இந்த ஆண்டு இறுதியில் ஜம்மு காஷ்மீரில் தேர்தல் நடைபெறவுள்ளது குறிப்பிடத்தக்கது.
 
முன்னதாக கடந்த அக்டோபர் 13 ஆம் தேதி, பிரதமர் மோடியை தூய்மை இந்தியா திட்டத்துக்காக பாரட்டியதன் காரணமாக கேரள காங்கிரஸ் புகார் அளித்ததையடுத்து காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் பட்டியலில் இருந்து சசி தரூர் நீக்கப்பட்டார் என்பது நினைவுகூறத்தக்கது.