வியாழன், 28 மார்ச் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Caston
Last Modified: ஞாயிறு, 17 ஜனவரி 2016 (19:33 IST)

எந்த அடிப்படையில் சஞ்சய் தத் முன் கூட்டியே விடுதலை: சிறை அதிகாரிக்கு பேரறிவாளன் மனு

எரவாடா மத்திய சிறையில் உள்ள இந்தி நடிகர் சஞ்சய் தத் வருகிற பிப்ரவரி 27 ஆம் தேதி முன்கூட்டியே விடுதலை செய்யப்பட உள்ளார். அவர் எந்த அடிப்படையில் முன் கூட்டியே விடுதலை செய்யப்பட உள்ளார் என பேரறிவாளன் தகவல் பெறும் உரிமை சட்டத்தின் கீழ் விளக்கம் கேட்டுள்ளார்.


 
 
மும்பை குண்டுவெடிப்பு வழக்கில் 5 ஆண்டுகள் சிறை தண்டனை பெற்ற இந்தி நடிகர் சஞ்சய் தத் நன்னடத்தை காரணமாக முன்கூட்டியே வரும் பிப்ரவரி 27 ஆம் தேதி விடுதலை செய்யப்படுவார் என எரவாடா சிறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
 
இந்நிலையில் ராஜிவ் காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை பெற்று வேலூர் சிறையில் உள்ள பேரறிவாளன் தகவல் பெறும் உரிமை சட்டத்தின் கீழ் எரவாடா சிறை அதிகாரிக்கு மனு அளித்துள்ளார்.
 
அவரது மனுவில், ஆயுத சட்டத்தின் கீழ் பதிவான வழக்கில் 5 ஆண்டு சிறை தண்டனை பெற்ற சஞ்சய் தத் பிப்ரவரி 27 ஆம் தேதி முன்கூட்டியே விடுதலை செய்யப்படவுள்ளதாக பத்திரிகைகளில் கடந்த 7 ஆம் தேதி செய்தி வெளியாகியுள்ளது. எனவே சஞ்சய்தத் விடுதலை தொடர்பான அனைத்து ஆவணங்களின் நகல்களையும் எனக்கு வழங்கவேண்டும்.
 
சஞ்சய் தத் நல்லொழுக்கம் காரணமாக அவரை முன்கூட்டியே விடுதலை செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளாதாக செய்தி வெளியாகியுள்ளது, அது தொடர்பான அனைத்து ஆவணங்களையும் எனக்கு வழங்கவேண்டும். அரசியலைப்பு சட்டத்தின் பிரிவு 161 இன் கீழ் முன் கூட்டியே விடுதலை செய்யப்படுகிறாரா? அல்லது குற்றவியல் விசாரணை முறை சட்டப்பிரிவுகளின் கீழ் அல்லது மராட்டிய மாநில சிறை விதிகளின் கீழ் விடுதலை செய்யப்படுகிறாரா? என்பது குறித்து விளக்கம் அளிக்கவேண்டும்.
 
இதே சட்டப்பிரிவுகளின் கீழ் நானும் முன்கூட்டியே விடுதலை பெறுவதற்காக இந்த விவரங்களை கேட்கிறேன். அதனால், இந்த ஆவணங்கள் அனைத்தும் 48 மணி நேரத்தில் எனக்கு வழங்கும்படி கேட்டுக்கொள்கிறேன். இதற்கான செலவு தொகையை வழங்கவும் தயாராக உள்ளேன் என பேரறிவாளன் தனது மனுவில் கூறியுள்ளார்.