வெள்ளி, 29 மார்ச் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Suresh
Last Updated : ஞாயிறு, 29 நவம்பர் 2015 (12:44 IST)

சல்மான் ருஷ்டியின் புத்தகத்திற்கு ராஜீவ் காந்தி அரசு தடை விதித்தது தவறு: ப.சிதம்பரம்

1988 ஆம் ஆண்டு, எழுத்தாளர் சல்மான் ருஷ்டியின் புத்தகத்திற்கு ராஜீவ் காந்தி அரசு தடை விதித்தது தவறு என்று முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் கூறியுள்ளார்.


 

 
டெல்லியில், நடைபெற்ற "டைம்ஸ் இலக்கிய திருவிழா" என்ற நிகழ்ச்சியில், முன்னாள் மத்திய அமைச்சரும், காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவருமான ப.சிதம்பரம் கலந்து கொண்டார்.
 
அந்த நிகழ்ச்சியில் ப.சிதம்பரம் பேசுகையில், "எழுத்தாளர் சல்மான் ருஷ்டி எழுதிய சாத்தானின் கவிதைகள் என்ற நூலுக்கு 1988 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம், அப்போதைய ராஜீவ் காந்தி அரசு தடை விதித்தது தவறானது." என்று கூறினார்.
 
இதைத் தொடர்ந்து, "இத்தனை ஆண்டுகள் கழித்து இந்த முடிவுக்கு வந்திருப்பது ஏன்?" என்ற கேள்வி ப.சிதம்பரத்திடம் முன்வைக்கப்பட்டது.
 
இந்தக் கேள்விக்குப் பதிலளித்துப் பேசிய ப.சிதம்பரம், "20 ஆண்டுகளுக்கு முன்னரே இந்தக் கேள்வியை நீங்கள் கேட்டிருந்தாலும் இதே பதிலைத்தான் கூறி இருப்பேன்" என்று கூறினார்.
 
ராஜீவ் காந்தியின் அப்போதய அரசில் ப.சிதம்பரம் மத்திய உள்துறை இணையமைச்சராக பதவி வகித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.