வெள்ளி, 19 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By லெனின் அகத்தியநாடன்
Last Modified: ஞாயிறு, 29 நவம்பர் 2015 (15:49 IST)

இந்தியாவின் மிகப்பெரும் பயங்கரவாத இயக்கம் ஆர்எஸ்எஸ் - முன்னாள் ஐ.ஜி.

இந்தியாவின் மிகப்பெரிய பயங்கரவாத இயக்கமாக ஆர்.எஸ்.எஸ். திகழ்ந்து வருவதாக மகாராஷ்டிரா மாநில காவல்துறையின் முன்னாள் ஐ.ஜி. எஸ்.எம்.முஷ்ரிஃப் குற்றம் சாட்டியுள்ளார்.
 

 
மகாராஷ்டிரா மாநில காவல்துறையின் ஐ.ஜி யாக பணியாற்றி ஓய்வு பெற்றவர் எஸ்.எம். முஷ்ரிஃப். இவர் கொல்கத்தாவில் நடைபெற்ற கருத்தரங்கு ஒன்றில் கலந்துகொண்டு முஷ்ரிஃப் பேசுகையில், "இந்திய நாட்டில் ஆர்டிஎக்ஸ் வெடிகுண்டுகள் மூலம் நிகழ்த்தப்பட்ட 13 பயங்கரவாத தாக்குதல் சம்பவங்களில் ஆர்.எஸ்.எஸ். இயக்கத்திற்கு நேரடியாக தொடர்பு உள்ளது என்ற அடிப்படையில் அவ்வியக்கத்தின் மீது குற்றப்பத்திரிகைகள் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
 
மேலும், ஆர்எஸ்எஸ் அமைப்பின் துணை இயக்கங்களாக கருதப்படும் பஜ்ரங் தளம் போன்ற இதர அமைப்புகளையும் சேர்த்தால் மொத்தம் 17 வழக்குகளில் ஆர்.எஸ்.எஸ். உள்ளிட்ட இந்துத்துவா இயக்கத்தினர் மீது குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
 
எனவே, இந்தியாவின் மிகப் பெரிய பயங்கரவாத இயக்கம் ஆர்எஸ்எஸ் என்பதில் எந்த ஒரு சந்தேகமும் இல்லை.
 
குறிப்பாக, 2006ஆம் ஆண்டு மெக்கா மஸ்ஜித் மசூதி குண்டுவெடிப்பு, 2007ஆம் ஆண்டு ஹைதராபாத் மற்றும் சம்ஜவுதா எக்ஸ்பிரஸ் ரயில் குண்டுவெடிப்பு, 2008இல் மலேகான் குண்டு வெடிப்பு ஆகிய சம்பவங்களில் ஆர்எஸ்எஸ் அமைப்பின் சதி உள்ளது என்பதை உறுதியாக சொல்லலாம்.
 
ஆர்எஸ்எஸ் அமைப்பு நேரடியாக அரசியலில் ஈடுபடவில்லை. ஆட்சி அதிகாரத்தையும் கையில் வைத்திருப்பதில்லை.
 
மேலும், எந்த கட்சி ஆட்சி அதிகாரத்தில் இருக்கிறது என்பதும் முக்கியமல்ல. ஆனால், எந்த கட்சி அரசு அதிகாரத்தில் இருந்தாலும் ஆர்எஸ்எஸ் தன்னுடைய பிராமணிய கட்டமைப்பை தடையின்றி செயல்படுத்தி வருகிறது.
 
நான் கூறும் பிராமணியம் என்பது பிராமணர்களை குறிப்பிடுவது அல்ல. மாறாக பிராமணியம் என்பது மனோரீதியான தாக்குதல், ஆதிக்கம் செலுத்துவது, ஒடுக்குமுறை ஆகியவற்றை குறிப்பிடுவதாகும் என அவர் கூறியுள்ளார்.