வியாழன், 25 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Ashok
Last Updated : திங்கள், 22 பிப்ரவரி 2016 (17:03 IST)

நான் என்ன தவறு செய்தேன்? ப்ரீடம் 251 ஸ்மார்ட் போன் உரிமையாளரின் குமறல்

இந்திய மக்களுக்கு மலிவு விலையில் ஸ்மார்ட் போன்களை விற்பனை செய்யும் நோக்கத்தை தவிர நான் வேறென்ன தவறு செய்தேன் என்று ரிங்கிங் பெல்ஸ் நிறுவனத்தின் உரிமையாளர் மோஹித் கோயல் பரபரப்பு பேட்டியளித்துள்ளார்.

 

 

ப்ரீடம் 251 (FREEDOM 251) என்ற பெயரில் ரிங்கிங் பெல்ஸ் நிறுவனம் குறைந்த விலை ஸ்மார்ட் போனை வழங்கும் அந்நிறுவனத்தின் உரிமையாளர், மளிகைக் கடைக்காரரின் மகனான மோஹித் கோயல் ஆவார். இவரது தந்தையான ராஜேஷ் கோயல். உத்தரப்பிரதேசம் மாநிலத்தில் உள்ள ஷாம்லி மாவட்டத்தில் மளிகைக்  கடை நடத்தி வருகிறார்.
 
மோஹித் கோயல், அமிட்டி பல்கலைக்கழகத்தில் முதுநிலை வணிக நிர்வாகம் தொடர்பாக எம்பிஏ பயின்றுள்ளார். இவர், சிறுவயது முதலே சொந்தமாக பிஸ்னஸ் செய்ய வேண்டும் என்று எண்ணம் இருந்து வந்துள்ளது.

இதையடுத்து, கடந்த ஆண்டு சொந்தமாக செல்போன் தயாரிக்கும் கம்பெனி தொடங்கப் போவதாக தந்தை ராஜேஷ் கோயலிடம் அவர் கூற, அதற்கு அவரது தந்தையும் மறுப்பு தெரிவிக்காமல், வங்கியில் இருந்து தன்னுடைய பெயரில் கடன்வாங்கி சில கோடி ரூபாயை மோஹித்திடம் கொடுத்துள்ளார். இந்த தொகையை வைத்து தனது நன்பர்களுடன் தொடங்கிய நிறுவனம் தான் குறைந்த விலை ஸ்மார்ட் போனை தயாரிக்கும் ரிங்கிங் பெல்ஸ் நிறுவனம்.
 
இந்நிலையில், மலிவுவிலை ஸ்மார்ட் போனைப் பற்றிய செய்திகள் சில தினங்களுக்கு முன்பு வெளியானதும், மோஹித் கோயலின் வீட்டையும், அவரது அலுவலகத்தையும் மத்திய உற்பத்திவரி துறை மற்றும் வருமான வரி துறை அதிகாரிகள் சோதனை நடத்த தொடங்கிவிட்டனர்.

இதுகுறித்து ஆங்கில நாளிதழ் ஒன்றுக்கு அவர் அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது," ப்ரீடம் 251 என்ற ஸ்மார்ட் போனுக்கான முன்பதிவு தொடங்கிய 18ஆம் தேதியில் இருந்து இதுவரை ஏழு கோடிக்கும் அதிகமானவர்கள் எங்களிடம் முன்பதிவு செய்துள்ளனர். இவற்றில் முதல் தவணையாக ஆன்லைன் மூலம் 25 லட்சம் பேருக்கும், கடைகளில்  சில்லரை விற்பனை மூலம் 25 லட்சம் பேருக்கும் வரும் ஜூன் மாதம் 30-ம் தேதிக்குள் ப்ரீடம் 251 ஸ்மார்ட் போன்கள்  எங்கள் நிறுவனம் மூலம் அனுப்பி வைக்கப்படும்.
 
இந்திய மக்களுக்கு மலிவு விலையில் ஸ்மார்ட் போன்களை விற்பனை செய்யும் நோக்கத்தை தவிர நான் வேறென்ன தவறு  செய்தேன்? என்மீது எந்த காவல் நிலையத்திலாவது மோசடி வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதா? அல்லது, என்மீதோ எனது நிறுவனத்தின்மீதோ வருமான வரி ஏய்ப்பு வழக்கு ஏதாவது நிலுவையில் உள்ளதா? சட்டப்பூர்வமான தொழில் செய்ய உரிய  முறையில் திட்டமிட்டு ஒரு வர்த்தக நிறுவனத்தை நான் தொடங்கி உள்ளேன்.
 
ஸ்மார்ட் போன் முன்பதிவு செய்த பொதுமக்களிடமிருந்து பெறப்படும் பணம் அத்தனையும் வங்கியில் டெபாசிட் செய்யப்பட்டிருக்கும். ப்ரீடம் 251 ஸ்மார்ட் போன்களை  டெலிவரி செய்வதற்கு முன்பாக அந்த பணத்தை நாங்கள் தொடக்கூட மாட்டோம். இந்த மாதிரியான செல்போன்களின் அடக்கவிலை சுமார் 1500 ரூபாய்வரை ஆகிறது. நாங்கள் தைவான் நாட்டில் இருந்து நேரடியாக உதிரிபாகங்களை கொள்முதல் செய்து, அந்த உதிரிபாகங்கள் மூலம் குர்கானில் உள்ள எங்கள் தொழிற்சாலையில் வைத்து செல்போனை  தயாரிக்க நாங்கள் ஒப்பந்தம் செய்துள்ளோம். இதனால், மலிவு விலையில் ஸ்மார்ட்போனை விற்பனை செய்ய முடிகிறது
 
நாங்கள் ஆன்லைன் மூலம் நேரடி மார்க்கெட்டிங்கில் இறங்குவதால் இதுபோன்ற வர்த்தகங்களில் உள்ள முகவர் கமிஷன், விளம்பர செலவு, சரக்கு போக்குவரத்து செலவு போன்றவை கணிசமாக குறையும். இதர நிறுவனங்களின் ஆப்ஸை எங்களது  ப்ரீடம் 251 ஸ்மார்ட் போன்களில் பயன்படுத்துவதால் அவர்கள் எங்களுக்கு அளிக்கும் கமிஷனையும் பொதுமக்களுக்கே  வழங்கும் வகையில் முடிவுசெய்துதான் 251 ரூபாய்க்கு அந்த ப்ரீடம் 251 ஸ்மார்ட் போனை முடிவு செய்தோம். இந்த விலைக்கு விற்கும் போது, எங்கள் நிறுவனத்திற்கு ஒரு போனுக்கு 31 ரூபாய்வரை லாபம் கிடைக்கும் என்று அவர் குறிப்பிட்டார்