வெள்ளி, 29 மார்ச் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By வீரமணி பன்னீர்செல்வம்
Last Modified: திங்கள், 11 மே 2015 (12:18 IST)

ரூ.1 கோடி கொடுத்தால் மோடியை நேரில் பார்க்கலாம்: மத்திய அரசு அறிவிப்பு

தூய்மை இந்தியா திட்டத்துக்கு ரூ.1 கோடி மற்றும் அதற்கு மேலான நன்கொடை தொகையை பிரதமர் நரேந்திர மோடியிடம் நேரடியாக வழங்கலாம் என மத்திய அரசு அறிவித்துள்ளது.
 

 
பாஜக மத்தியில் ஆட்சிக்கு வந்த பிறகு தூய்மை இந்தியா திட்டத்துக்கு அதிக முக்கியத்துவம் வழங்கி வருகிறது. அதன்படி கங்கையை தூய்மைப்படுத்தும் பணிக்கு பிரதமர் நரேந்திர மோடி கோடிக்கணக்கில் நிதி ஒதுக்கியுள்ளார்.
 
மேலும் நாம் வசிக்கும் தெருவை நாமே சுத்தப்படுத்த வேண்டும் என்று வலியுறுத்தி அவரே நேரடியாக களம் இறங்கி தெருவை சுத்தப்படுத்தினார். இதற்கு நாடு முழுவதும் அமோக வரவேற்பு இருந்தது. இதனை பின்பற்றி மத்திய அமைச்சர்கள், சினிமா நடிகர்கள் மற்றும் முக்கிய பிரமுகர்கள் தெருவை சுத்தம் செய்ய களம் இறங்கினர்.
 
இந்நிலையில் “தூய்மை இந்தியா கோஷம்” என்ற திட்டத்தை பாஜக அரசு கையில் எடுத்துள்ளது. அதன்படி இந்த திட்டத்துக்கு ரூ.1 கோடி மற்றும் அதற்கு மேல் நன்கொடை அளிக்கும் தனி நபரும், ரூ.20 கோடிக்கு அதிகமாக நிதி வழங்கும் நிறுவனங்களும் நேரடியாக பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்து வழங்கலாம் என மத்திய அரசு அறிவித்துள்ளது.
 
மேலும் ரூ.50 லட்சம் முதல் ரூ.1 கோடி வரை தனி நபரும், ரூ.10 கோடி முதல் ரூ.20 கோடி வரை நிறுவனங்களும் நேரடியாக நிதியமைச்சர் அருண் ஜேட்லியிடம் வழங்கலாம்.
 
இந்த அறிவிப்பின் மூலம் தூய்மை இந்தியா திட்டத்துக்கு நிதி குவியும் என மத்திய அரசு நம்புகிறது. வருகிற 2019ஆம் ஆண்டுக்குள் இந்தியாவை தூய்மை நாடாக மாற்ற வேண்டும் என்பதே இதன் நோக்கமாகும்.
 
இந்த நிதியை பெண்களுக்கு பொது கழிப்பறை கட்டுவது, பள்ளிகளில் மோசமான நிலையில் உள்ள கழிப்பறையை புதுப்பிப்பது, பொது சுகாதாரத்தை பேணி காப்பது, தெருக்களை சுத்தமாக வைத்து கொள்வது போன்றவற்றுக்காக பயன்படுத்த மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.
 
இதற்கு மனித நேயம் கொண்ட தனி நபர்களும், தனியார் நிறுவனங்களும் நன்கொடையை வாரி வழங்க வேண்டும் என்றும் அரசு வேண்டுகோள் விடுத்துள்ளது. இந்திய நிதியை பாரத ஸ்டேட் வங்கி மூலம் காசோலை, வரைவோலை, கடன் அட்டை போன்றவற்றின் வாயிலாகவும் வழங்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.