வெள்ளி, 29 மார்ச் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By லெனின் அகத்தியநாடன்
Last Modified: வெள்ளி, 25 நவம்பர் 2016 (17:29 IST)

ரிலையன்ஸுக்கு மட்டும் ஏன் ரூ.1767 கோடி வரிச் சலுகை?

ரிலையன்ஸ் நிறுவனம் ரூ.5245 கோடி செலவில் கட்டிய துறைமுக போக்குவரத்து முனையத்திற்கு வருமான வரித்துறை ரூ.1767 கோடி வரி விலக்கு அளித்துள்ளது ஏன் என்று மத்திய தணிக்கை ஆணையம் கேள்வி எழுப்பியுள்ளது.


 

குஜராத்தின் சிக்கா பகுதியில் ரிலையன்ஸ் நிறுவனம் துறைமுகம் மற்றும் போக்குவரத்து முனையத்தை அமைத்தது. இதனைத் தொடர்ந்து 4 துணை துறைமுகங்கள் ரூ. 5,245.38 கோடி செலவில் அமைக்கப்பட்டன. இந்த துணை துறைமுகங்களை வருமான வரித்துறை முறையாக ஆய்விற்கு உட்படுத்தாமல் முழுமையாக வரி விலக்கு அளித்திருக்கிறது.

வருமான வரித்துறையின் இந்த நடவடிக்கையால் அரசுக்கு ரூ.1,766.74 கோடி வரி இழப்பு ஏற்பட்டுள்ளது. கடந்த 2012-2013 மற்றும் 2014-2015ம் ஆண்டு கணக்கு தணிக்கையிலிருந்து இந்த முறைகேடு தெரியவந்துள்ளது.

இதற்கு மறுப்பு தெரிவித்துள்ள வருமான வரித்துறை, வருமான வரிச் சட்டம் 80 ஐ-ன் கீழ் வரிச் சலுகை கேட்பவர்களுக்கு பொது பயன்பாடு என்றும் தனியார் பயன்பாடு என்ற வேறுபாடில்லாமல், அவர்கள் பெறும் லாபங்கள் மற்றும் ஆதாயங்களைப் பார்க்காமல் அவர்களுக்கு வரிச்சலுகை அளிக்கப்படும் எனத் தெரிவித்துள்ளது.

ஆனால் இதற்கு மறுப்புத் தெரிவித்துள்ள சிஏஜி, அப்படியென்றால் இதே விதிமுறையின் கீழ் மற்ற எந்த தனியார் நிறுவனத்திற்கும் வரி விலக்கு அளிக்காத நிலையில் ஏன் ரிலையன்ஸ் நிறுவனத்திற்கு மட்டும் இந்தச் சலுகை என்று கேள்வி எழுப்பி உள்ளது.