1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By வீரமணி பன்னீர்செல்வம்
Last Modified: வெள்ளி, 21 நவம்பர் 2014 (17:00 IST)

பி.சி.சி.ஐ. தலைவராக மீண்டும் பணியாற்ற அனுமதிக்க வேண்டும்: உச்ச நீதிமன்றத்திடம் சீனிவாசன் வேண்டுகோள்

பி.சி.சி.ஐ. தலைவராக தன்னை மீண்டும் பணியாற்ற அனுமதிக்க வேண்டும் என்று பி.சி.சி.ஐ. முன்னாள் தலைவர் சீனிவாசன் உச்ச நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளார்.
 
ஐ.பி.எல். போட்டிகளின் போது மேட்ச் பிக்சிங் நடைபெற்றதாக குற்றச்சாட்டு எழுந்ததை தொடர்ந்து, இது குறித்து விசாரிக்க ஓய்வு பெற்ற நீதிபதி முகுல் முத்கல் தலைமையில் குழு அமைத்து உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. இக்குற்றச்சாட்டில் பி.சி.சி.ஐ. தலைவராக இருந்த சீனிவாசனின் மருமகன் குருநாத் மெய்யப்பனுக்கு தொடர்பிருப்பதாக கூறப்பட்டது.
 
எனவே அதன் தலைவராக இருந்த சீனிவாசனுக்கு அப்பதவியில் தொடர உச்ச நீதிமன்றம் தடை விதித்தது. பல மாதங்களாக பல்வேறு நபர்களிடம் விசாரணை நடத்திய முத்கல் குழு கடந்த சில தினங்களுக்கு முன் உச்ச நீதிமன்றத்தில் இது தொடர்பான இறுதி அறிக்கையை தாக்கல் செய்தது.
 
அந்த அறிக்கையில் சீனிவாசன் பெட்டிங் மற்றும் மேட்ச் பிக்சிங்கில் ஈடுபடவில்லை என்று குறிப்பிடப்பட்டிருந்தது. இதனையடுத்து தன்னை மீண்டும் பி.சி.சி.ஐ. தலைவர் பதவியில் தொடர அனுமதிக்கவேண்டும் என்று உச்ச நீதிமன்றத்திடம் சீனிவாசன் கோரிக்கை வைத்துள்ளார். அவரது கோரிக்கையை உச்ச நீதிமன்றம் ஏற்குமா அல்லது நிராகரிக்குமா? என்பது சில தினங்களில் தெரிய வரும்.