வியாழன், 25 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Mahalakshmi
Last Modified: திங்கள், 1 செப்டம்பர் 2014 (15:58 IST)

பாகிஸ்தான் தொடர்ந்து தாக்குதல் நடத்தினால் தக்க பதிலடி கொடுக்க நடவடிக்கை: ராஜ்நாத் சிங்

பாகிஸ்தான் தொடர்ந்து போர் நிறுத்தத்தை மீறி தாக்குதல் நடத்தினால் தக்க பதிலடி கொடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்று உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் கூறியியுள்ளார்.

இது குறித்து ராஜ்நாத்சிங் கூறியதாவது:–

“காங்கிரஸ் ஆட்சி செய்த கடந்த 10 ஆண்டுகளில் இந்தியாவை பலவீனமான ஒரு நாடாக ஏளனம் செய்யும் நிலையே இருந்தது. இந்த மோசமான எண்ணம் இந்தியர்களிடம் மட்டுமின்றி உலக நாட்டு மக்களின் மனதிலும் இருந்தது.

ஆனால் தற்போது மத்தியில் நரேந்திர மோடி தலைமையில் புதிய ஆட்சி அமைந்த பிறகு அந்த எண்ணம் மாற்றப்பட்டு வருகிறது.
எல்லாரும் நினைப்பது போல இந்தியா பலவீனமான நாடு அல்ல.

எல்லா நேரத்திலும் முந்தைய ஆட்சியாளர்கள் போல மென் மையாக நடந்து கொள்ளும் நாடாக இந்தியா இனி இருக்காது. நம்மை தாக்குபவர்களுக்கு உரிய வகையில் தக்க பதிலடி கொடுப்பதற்கு, இந்தியாவிடம் முழுமையான வலிமை உள்ளது.

இந்தியாவுடன் ஆரோக்கியமான, அமைதியான நல்லுறவை தொடர அண்டை நாட்டு தலைவர்கள் வாக்குறுதி அளித்தனர். ஆனால் பாகிஸ்தான் மட்டும் அதை புறக்கணித்து எல்லையில் தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகிறது.

எல்லையில் அத்துமீறுவதை பாகிஸ்தான் நிறுத்திக் கொள்ள வேண்டும். இனி எல்லையில் பாகிஸ்தான் தாக்குதல் நடத்தினால், பாதுகாப்பு படை வீரர்கள் வெள்ளைக் கொடி காட்டி கொண்டிருக்க மாட்டார்கள்.

இதுவரை 15 முறை இந்தியா எல்லை பாதுகாப்புப் படை வீரர்கள், பாகிஸ்தான் தாக்கும் போதெல்லாம் வெள்ளைக் கொடி காட்டி சமரசமாக சென்றுள்ளனர்.

இனி பாகிஸ்தான் எல்லையில் அத்துமீறும் செயல்களில் ஈடுபட்டால் வெள்ளை கொடிக்கு பதில் ஆயுதங்களை எடுத்து தக்க பதிலடி கொடுக்கும்படி அறிவுறுத்தி இருக்கிறேன். எனவே இனி பாகிஸ்தான் சுட்டால், இந்தியா கடுமையான பதிலடியை கொடுக்கும்“ என்று தெரிவித்தார்.

இந்தியா, நேபாளம், இலங்கை, பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், மாலத்தீவு, பூடான், வங்காளதேசம் ஆகிய நாடுகளைச் சேர்ந்த பிரதிநிதிகள் சார்க் மாநாட்டில் பங்கேற்கிறார்கள். இம்மாநாடு நேபாளத்தில் நடைபெறவுள்ளது.

இதில் இந்தியா சார்பில் மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங் மாநாட்டில் பங்கேற்கிறார். அப்போது பாகிஸ்தான் அமைச்ரை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்துவார் என்ற தகவல் வெளியாகி இருந்தது.

ஆனால் இத்தகவலை மத்திய உள்துறை அமைச்சகம் மறுத்துள்ளது. பேச்சுவார்த்தையும், பயங்கரவாதத்தையும் ஒன்றாக செயல்படுத்த முடியாத செயல் என்ற கருத்தில் மத்திய உள்துறை அமைச்சகம் உள்ளது.