வியாழன், 18 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By வீரமணி பன்னீர்செல்வம்
Last Modified: புதன், 29 ஜூலை 2015 (15:56 IST)

ராஜீவ் கொலையாளிகள் தண்டனை குறைப்புக்கு எதிரான மத்திய அரசின் மனு தள்ளுபடி

ராஜீவ் கொலையாளிகள் முருகன், சாந்தன், பேரறிவாளன் ஆகியோருக்கு விதிக்கப்பட்ட தூக்கு தண்டனையை கடந்த 2014 ஆம் ஆண்டு உச்ச நீதிமன்றம் ஆயுள் தண்டனையாக குறைத்தது.
 

 
3 பேரும் குடியரசு தலைவருக்கு அனுப்பிய கருணை மனு மீது முடிவு எடுக்க காலதாமதம் ஆனதாலும் தாங்கள் 23 ஆண்டுகள் தொடர்ந்து சிறை தண்டனை அனுபவித்து வருவதாலும் தண்டனையை குறைக்க வேண்டும் என்று மனு தாக்கல் செய்தனர். இந்த மனுவை ஏற்ற உச்ச நீதிமன்றம், 3 பேரின் தண்டனையை ஆயுள் தண்டனையாக குறைத்தது.
 
இதற்கிடையே ராஜீவ் கொலையாளிகள் 3 பேரின் தண்டனை குறைப்புக்கு எதிர்ப்பு தெரிவித்தும் தண்டனை குறைப்பை ரத்து செய்யக்கோரியும், மத்திய அரசு உச்ச நீதிமன்றத்தில் மறுசீராய்வு மனு தாக்கல் செய்தது.
 
இந்த மனு இன்று உச்ச நீதிமன்ற நீதிபதிகள் முன் விசாரணைக்கு வந்தது. அப்போது தண்டனைக் குறைப்புக்கு எதிரான மத்திய அரசின் மனுவை நீதிபதிகள் தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.
 
தண்டனைக் குறைப்புக்கு எதிராக எந்த முகாந்திரமும் இல்லை என்று நீதிபதிகள் தீர்ப்பில் கூறியுள்ளனர். இதன் மூலம் ராஜீவ் கொலையாளிகள் 3 பேரும் ஆறுதல் அடைந்துள்ளனர். அவர்களுக்கு ஆயுள் தண்டனையாக குறைக்கப்பட்டதால் விடுதலை செய்து தமிழக அரசு உத்தரவிட்டது. இதை எதிர்த்து மத்திய அரசு உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தது.
 
இந்த மனு உச்ச நீதிமன்றத்தின் 5 நீதிபதிகள் அடங்கிய அரசியல் சாசன அமர்வு முன் விசாரணையில் உள்ளது.