வெள்ளி, 29 மார்ச் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By வீரமணி பன்னீர்செல்வம்
Last Modified: சனி, 25 ஏப்ரல் 2015 (15:57 IST)

டெல்லியில் விவசாயி தற்கொலை: அரவிந்த் கெஜ்ரிவால் மீது 10 வழக்குகள் பதிவு!

டெல்லியில் நடைபெற்ற ஆம் ஆத்மி பேரணியில்  விவசாயி தற்கொலை செய்து கொண்டது தொடர்பாக, அரவிந்த் கெஜ்ரிவால் மீது 10 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
 

 
மத்திய அரசின் நிலம் கையகப்படுத்தும் மசோதாவுக்கு எதிராக கடந்த வியாழக்கிழமை ஆம் ஆத்மி நடத்திய பேரணியின்போது, ராஜஸ்தானைச் சேர்ந்த விவசாயி கஜேந்திர சிங் மரத்தில் ஏறி தூக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்டார். ஆயிரக்கணக்கான தொண்டர்கள் மத்தியில் நடந்த இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
 
இது தொடர்பாக அரவிந்த் கெஜ்ரிவால் மீதும் ஆம் ஆத்மி கட்சியினர் மீதும் டெல்லி போலீசார் குற்றம் சாட்டியுள்ளனர். ஆயிரக்கணக்கான தொண்டர்கள் மத்தியில் கஜேந்திர சிங் தற்கொலை முயற்சியில் ஈடுபட்ட போது அவரை அனைவரும் கைதட்டி ஊக்கப்படுத்தினார்கள். இவ்வளவு பேருக்கு மத்தியில் தூக்கில் தொங்கும் போது தன்னை காப்பாற்றி விடுவார்கள்; சாக விடமாட்டார்கள் என்ற தைரியத்தில் அவர் இந்த முடிவு எடுத்தாகக் கூறப்படுகிறது.
 
தற்கொலை முயற்சியின் போது யாருமே காப்பாற்ற முன்வராததால் மரணம் ஏற்பட்டுவிட்டது. மேடையில் இருந்தவர்களும், இந்த காட்சியைப் பார்த்து ரசித்தார்கள். எனவே விவசாயி மரணத்துக்கு, கூட்டம் ஏற்பாடு செய்த ஆம் ஆத்மி கட்சியினரே காரணம் என டெல்லி போலீஸ் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
 
டெல்லி போலீசாரின் இந்த குற்றச்சாட்டுக்கு அரவிந்த் கெஜ்ரிவால் மறுப்பு தெரிவித்துள்ளார். மேலும் விவசாயி தற்கொலைக்காக மன்னிப்பு கேட்பதாகவும் கூறியுள்ளார்.
 
இதற்கிடையே விவசாயி தற்கொலை தொடர்பாக அரவிந்த் கெஜ்ரிவால் மீது வழக்குப்பதிவு செய்யக்கோரி டெல்லி போலீசுக்கு இதுவரை 10 புகார்கள் வந்துள்ளன. நேற்று மாலை கடைசியாக டெல்லி மாநில இளைஞர் காங்கிரஸ் தலைவர் அமித் மாலிக், அரவிந்த் கெஜ்ரிவால் மீது வழக்குப்பதிவு செய்யுமாறு புகார் கொடுத்தார்.
 
இது குறித்து அமித் மாலிக் கூறும்போது, "விவசாயி கஜேந்திர சிங், அரவிந்த் கெஜ்ரிவாலையும், மணீஷ் சிசோடியாவையும் சந்திக்க வந்துள்ளார். ஆனால் தொண்டர்கள் அவரை தற்கொலை நாடகமாடினால் தலைவர்கள் கவனத்தை ஈர்க்கலாம் என்று தூண்டி விட்டுள்ளனர்.
 
இதனால்தான் அனைவரது கண்முன் அவர் இறந்து இருக்கிறார். அதன் பிறகும் கூட்டம் தொடர்ந்திருக்கிறது. இதன் மூலம் இது திட்டமிட்ட செயல் என தெரிய வருகிறது. எனவே அரவிந்த் கெஜ்ரிவால் மீதும், மணிஷ் சிசோடியா, குமார் விஸ்வாஸ் ஆகியோர் மீதும் வழக்குப்பதிவு செய்ய வேண்டும்" என்றார்.
 
இந்தப் புகார்கள் மீது வழக்குப்பதிவு செய்து குற்றப்பிரிவு போலீஸ் விசாரணைக்கு அனுப்பப்பட்டுள்ளதாக டெல்லி போலீசார் தெரிவித்துள்ளனர்.