வியாழன், 25 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By K.N.Vadivel
Last Updated : திங்கள், 31 ஆகஸ்ட் 2015 (02:16 IST)

ராஜஸ்தான் 108 ஆம்புலன்ஸ் சேவை ஊழல் - எனக்கு எந்த பங்கும் இல்லை: கார்த்தி ப.சிதம்பரம்

ராஜஸ்தானில் 108 ஆம்புலன்ஸ் சேவையில் எனக்கு எந்த பங்கும் இல்லை என முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரத்தின் மகன் கார்த்தி ப.சிதம்பரம் கருத்து தெரிவித்துள்ளார்.
 

 
ராஜஸ்தானில் அசோக் கெலாட் தலைமையிலான காங்கிரஸ் அரசு நடந்தபோது, 108 ஆம்புலன்ஸ் சேவையை அமல்படுத்த டெண்டர் விடப்பட்டது.
 
இந்த டெண்டர் அறிவிப்பில், ஆம்புலன்சில் ஜி.பி.எஸ். கருவி பொருத்தப்பட்டிருக்க வேண்டும் என்று நிபந்தனை விதித்து, மும்பை மற்றும் ஜெய்ப்பூரில் செயல்பட்டு வரும் ‘ஜிகித்சா ஹெல்த் கேர்’ என்ற நிறுவனம் மட்டுமே டெண்டரில் பங்கேற்கும் வகையில், டெண்டர்  வழங்கப்பட்டு உள்ளது.
 
கடந்த 2010ஆம் ஆண்டு முதல் 2013ஆம் ஆண்டு வரை, 35 மாவட்டங்களில் 450 ஆம்புலன்ஸ்கள் இயக்கப்பட்டு உள்ளன. இதில், ஜிகித்சா ஹெல்த் கேர் நிறுவனம் அதிகப்படியான தொகைக்கு ரசீதுகளை சமர்ப்பித்ததாக புகார் எழுந்தது.
 
இந்த நிலையில், ஜெய்ப்பூர் நகர மேயர் பங்கஜ் ஜோஷி அளித்த புகாரின் பேரில், அசோக் கெலாட் உள்ளிட்டோர் மீது ஜெய்ப்பூரில் உள்ள அசோக்நகர் போலீசார் வழக்கு பதிவு செய்தனர். மேலும் இந்த வழக்கை சிபிஐ விசாரணைக்கு மாநில அரசு பரிந்துரை செய்தது.
 
இதனையடுத்து, இந்த வழக்கை கையில் எடுத்த, சிபிஐ காங்கிரஸ் மூத்த தலைவர்கள், அசோக் கெலாட், ஜிகித்சா ஹெல்த் கேர் நிறுவன இயக்குநர்கள் சச்சின் பைலட், மத்திய முன்னாள் அமைச்சர் ப.சிதம்பரத்தின் மகனான கார்த்தி சிதம்பரம், மத்திய முன்னாள் அமைச்சர் வயலார் ரவியின் மகனான கிருஷ்ணா உள்ளிட்டோர் மீது வழக்கு பதிவு செய்தது.
 
ஆனால், இந்த புகார் குறித்து கார்த்தி கூறுகையில், ஜிகித்சா ஹெல்த் கேர் நிறுவனத்தில் கடந்த 2012ஆவது ஆண்டு பிப்ரவரி 24 ஆம் தேதி வரை நான்- எக்சியூட்டிவ் இயக்குனராக பணியாற்றியுள்ளேன். ஆனால், கம்பெனியின் நிர்வாகத்தில் ஒரு போதும் தலையிட்டது இல்லை. மேலும், இந்த நிறுவனத்தில் எனக்கு ஒரு பங்கு கூட இல்லை என்று மறுப்பு தெரிவித்துள்ளார்.