வெள்ளி, 29 மார்ச் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By வீரமணி பன்னீர்செல்வம்
Last Modified: ஞாயிறு, 19 ஏப்ரல் 2015 (14:58 IST)

நாட்டின் வலிமை மோடிக்கு தெரியவில்லை: ராகுல் காந்தி குற்றச்சாட்டு!

நாட்டின் வலிமை என்னவென்று பிரதமர் மோடிக்கு தெரியவில்லை என்று காங்கிரஸ் கட்சியின் துணைத் தலைவர் ராகுல் காந்தி குற்றம்சாட்டியுள்ளார்.
 
மத்திய அரசின் நிலம் கையகப்படுத்துதல் மசோதாவுக்கு எதிராக டெல்லி ராம்லீலா மைதானத்தில் இன்று காங்கிரஸ் கட்சி சார்பில் பேரணி, பொதுக்கூட்டம்  நடைபெறுகிறது. இந்த கூட்டத்தில் லட்சக்கணக்கான விவசாயிகள், காங்கிரஸ் கட்சியின் தலைவர் சோனியா காந்தி, முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங், ஏ.கே.அந்தோணி மற்றும் மூத்த தலைவர்கள் மற்றும் தொண்டர்கள் கலந்து கொண்டனர்.
 
பல நாட்கள் திடீர் விடுமுறைக்கு பின் காங்கிரஸ் கட்சியின் துணைத் தலைவர் ராகுல் காந்தி கலந்து கொண்டு இந்த பேரணியில் பேசும்போது, ''இந்த நாட்டின் வலிமை பிரதமர் நரேந்திர மோடிக்கு தெரியவில்லை. மென்பொறியாளர்கள், தொழிலதிபர்களைவிட விவசாயிகள் தான் நாட்டில் வலிமையானவர்கள்.
 
நாட்டில் உள்ள விவசாயிகள் மிகுந்த வேதனையில் உள்ளனர். மத்திய அரசு தங்களை கைவிட்டு விட்டதாக விவசாயிகள், தொழிலாளர்கள் எண்ணுகின்றனர். விவசாயிகள் இன்று தங்களது நிலத்தை பயன்படுத்த முடிகிறது. நாளை இந்த நிலம் என்னவாகும் என்று தெரியாது. விவசாயிகள் பயத்துடன் வாழ்கிறார்கள்.
 
காங்கிரஸ் அரசு தான் விவசாயிகளுக்கு உதவியாக இருந்துள்ளது. நாங்கள் விவசாயிகளுக்கு ரூ.70 ஆயிரம் கோடி கடன் கொடுத்துள்ளோம். பல்வேறு பிரச்சனைகள் காரணமாக விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டது எனக்கு கவலை அளிக்கிறது. பாதிக்கப்பட்ட குடும்பத்தினரை நான் இப்போதும் நினைத்து பார்க்கிறேன். விவசாயிகள் கடனில் தத்தளித்தபோது கடன்களை தள்ளுபடி செய்தோம்.
 
நாங்கள் 2013ல் கொண்டு வந்த மசோதா அம்சங்களை கொண்டுவர மோடி அரசு தயங்குவது ஏன்? பெரிய நிறுவனங்களுக்காகவே மத்திய அரசு உள்ளதாக விவசாயிகள் கருதுகின்றனர். நில கையகப்படுத்துதல் மசோதாவில் செய்யப்பட்ட திருத்தம் விவசாயிகளை அச்சப்பட வைத்து உள்ளது. ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசின் சட்டம், விவசாயிகளுக்கு பலனை அளித்துள்ளது" என்றார்.