வியாழன், 25 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By வீரமணி பன்னீர்செல்வம்
Last Updated : திங்கள், 20 ஏப்ரல் 2015 (09:36 IST)

விவசாயிகளுக்கு எதிராக செயல்படும் மத்திய அரசு: ராகுல் காந்தி கடும் தாக்கு!

நிலம் கையகப்படுத்த அவசர சட்டம் கொண்டு வருவதன் மூலம் மத்திய அரசு விவசாயிகளுக்கு எதிராக செயல்படுகிறது என்று ராகுல் காந்தி கடுமையாக தாக்கி பேசினார்.
 

 
56 நாட்கள் அரசியல் விடுப்புக்கு பின்பு காங்கிரஸ் துணைத்தலைவர் ராகுல் காந்தி நாடு திரும்பினார். இந்நிலையில் நேற்று மதியம் ராகுல் காந்தி தலைமையில் டெல்லியில் உள்ள ராம்லீலா மைதானத்தில் விவசாயிகள் பேரணி நடந்தது.
 
இந்த பேரணியில் டெல்லி, உத்தரப் பிரதேசம், அரியானா, பஞ்சாப், மத்தியப் பிரதேச மாநிலங்களைச் சேர்ந்த லட்சக்கணக்கான விவசாயிகள் கலந்து கொண்டனர். இதில் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங், கட்சியின் மூத்த தலைவர்களும் பங்கேற்றனர்.
 
இதில் பேசிய ராகுல் காந்தி, மத்திய அரசு நிலம் கையகப்படுத்துவதில் அவசர சட்டம் கொண்டு வந்தது குறித்து கடுமையாக சாடினார். பிரதமர் மோடியை தனது உரையில் ஆவேசமாக தாக்கிப்பேசவும் அவர் தவறவில்லை.
 
விவசாயிகள் பேரணியில் ராகுல்காந்தி பேசியதாவது:-
 
மத்திய அரசு கொண்டு வந்துள்ள நிலம் கையகப்படுத்தும் அவசர சட்டம் விவசாயிகளின் நலன்களுக்கு மட்டுமல்ல, பழங்குடி மக்களுக்கும் எதிரானது.
 
கடந்த நாடாளுமன்ற தேர்தலில் மோடி எப்படி வெற்றி பெற்றார் என்பதை உங்களுக்குச் சொல்கிறேன். அவர் ஆயிரக்கணக்கான கோடி ரூபாயை பெரும் தொழிலதிபர்களிடம் இருந்து கடனாக பெற்றார். அதில் அவருடைய சந்தைப்படுத்துதல் செய்து முடிக்கப்பட்டது.
 
அந்த பணத்தை அவரால் எப்படி திருப்பிச் செலுத்த இயலும்? அந்த பெரும் தொழிலதிபர்களுக்கு உங்களுடைய நிலங்களை கொடுப்பதன் மூலம் அந்த கடனை திருப்பி அளிக்கப்போகிறார். அவர் விவசாயிகளை பலவீனப்படுத்தி அவர்களுடைய நிலங்களை பறித்து, தொழிலதிபர்களிடம் கொடுக்கப்போகிறார்.
 
குஜராத் மாநிலத்தில் மோடி இதேபோல் விவசாயிகளின் நிலங்களை எளிதாக பறிமுதல் செய்து அதை தொழிலதிபர்களுக்கு கொடுத்து அவர்களை சமாதானப்படுத்தினார். அதேபோன்ற குஜராத் மாதிரியைத்தான் இந்த நாடு முழுமைக்கும் செய்ய நினைக்கிறார்.
 
மத்திய அரசு முன்பு ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு கொண்டு வந்த நிலம் கையகப்படுத்தும் சட்டத்தில் கூறப்பட்ட விதிமுறைகளை மாற்ற முயற்சிக்கிறது. விவசாயிகளின் நிலங்களை பறிமுதல் செய்ய நினைக்கிறது. இப்படி செய்தால், மோடி அரசின் இந்தியாவில் தயாரிப்போம் கனவு பலிக்காது.
 
மத்திய அரசு ஏழை மக்களுக்காக செயல்பட வேண்டும். ஏனென்றால் விவசாயிகள் இந்த நாட்டை தங்களின் வியர்வையாலும், ரத்தத்தாலும் உருவாக்கி இருக்கிறார்கள்.
 
மேலும் அடுத்த பக்கம்.. 

2013-ல் ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு நிலம் கையகப்படுத்தும் மசோதாவை நாடாளுமன்றத்தில் நிறைவேற்றியபோது அதை பாஜக தலைவர்கள் கைதட்டி வரவேற்றனர்.
 
இப்போது அவர்கள் அதே மசோதா தொடர்பாக அவசர சட்டத்தை ஏன் கொண்டுவரவேண்டும்? அப்போது கொண்டு வரப்பட்ட மசோதாவுக்கும், இப்போது கொண்டு வரப்பட்டுள்ள அவசர சட்டத்துக்கும் என்ன வித்தியாசம்?... நிலம் கையகப்படுத்தும் அவசர சட்டத்தில் பாஜக -வோ, தேசிய ஜனநாயக கூட்டணியோ விவசாயிகளின் குரலை காதில் போட்டுக்கொள்ளவில்லை.
 
மத்திய அரசின் நிலம் கையகப்படுத்தும் அவசர சட்டம் விவசாயிகளின் நிலங்களை பறிப்பதோடு மட்டுமின்றி அவர்களின் வாழ்வாதாரத்தையும் இழக்கச் செய்துவிடும். மத்திய அரசு உங்களுடைய நிலங்களை பறிக்க முயன்றால், நாங்கள் உங்களுக்கு துணை நிற்போம்.
 
வெளிநாடு சென்ற பிரதமர் முந்தைய ஆட்சியாளர்களின் 50 ஆண்டு கால குப்பையை சுத்தம் செய்து வருவதாக கூறியிருக்கிறார். இந்தியாவுக்கு வெளியே பிரதமர் இவ்வாறு பேசியிருப்பது அவருக்கோ, பிரதமர் பதவிக்கோ அழகல்ல என்று ராகுல் காந்தி பேசினார்.
 
பேரணியில் காங்கிரஸ் தலைவர் சோனியா பேசியதாவது:-
 
மோடி அரசின் செயல்பாடுகள் முழுவதுமாக விவசாயிகள், ஆதரவற்றவர்கள், ஏழைகளுக்கு எதிரானதாகவும், தொழில் நிறுவனங்கள் மற்றும் தொழிலதிபர்களுக்கு சாதகமாகவும் உள்ளது. விவசாயிகளின் உரிமைகளை மோடி அரசு பாதுகாக்க தவறிவிட்டது.
 
இதை எதிர்த்துப் போராடும் புதிய சக்தி எங்களுக்கு கிடைத்து இருக்கிறது. மோடி அரசு இதுவரை செய்ததெல்லாம் போதும். இதற்கு மேலும் இந்த விஷயத்தில் நாங்கள் பொறுமை காக்கமாட்டோம்.
 
நமது சுதந்திரத்தை பறித்து அழிக்க நினைக்கும் சக்திகளை நாங்கள் ஒருபோதும் அனுமதிக்க மாட்டோம். இதுபோன்ற சக்திகளுக்கு எதிராக நாங்கள் எந்த அச்சமும் இன்றி போராடுவோம் என்று சோனியா காந்தி பேசினார்.
 
பேரணியில் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் பேசும்போது, “புதிய அரசின் நிலம் கையகப்படுத்தும் சட்டம் விவசாயிகளின் நலன்களுக்கு தீங்கிழைப்பதாக இருக்கிறது. நாடாளுமன்ற தேர்தல் வெற்றிக்காக விவசாயிகளுக்கும், இளைஞர்களுக்கும் பொய்யான வாக்குறுதிகளை அளித்து மோடி ஏமாற்றிவிட்டார்” என்று குற்றம் சாட்டினார்.