1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Suresh
Last Updated : திங்கள், 4 மே 2015 (10:59 IST)

பேருந்திலிருந்து வீசி கொல்லப்பட்ட சிறுமி: இறுதிச் சடங்கு செய்ய தந்தை ஒப்புதல்

பஞ்சாப்பில் பாலியல் தொந்தரவு கொடுத்து பேருந்திலிருந்து வீசி கொல்லப்பட்ட சிறுமியின் உடலுக்கு இறுதிச் சடங்கு செய்ய தந்தை ஒப்புக் கொண்டார்.
 
பஞ்சாப் மாநிலம் மோகா அருகே கடந்த 29 ஆம் தேதி தனியார் பேருந்தில் பெண் ஒருவர் தனது 16 வயது மகள் மற்றும் 10 வயது மகனுடன் சென்று கொண்டிருந்தார். செல்லும் வழியில் தாய் மற்றும் மகளுக்கு, பேருந்தின் நடத்துநர் மற்றும் உதவியாளர் பாலியல் தொந்தரவு கொடுத்தனர்.
 
இதற்கு அவர்கள் இருவரும் எதிர்ப்பு தெரிவித்ததால், ஓடும் பேருந்தில் இருந்து இருவரையும் அவர்கள் வெளியே வீசி விட்டனர். இந்த சம்பவத்தால், சிறுமி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். தாய் படுகாயமடைந்தார். இந்த சம்பவம் தொடர்பாக 4 பேர் கைது செய்யப்பட்டனர்.
 
இதைத் தொடர்நது, பஞ்சாப் முதலமைச்சர் பிரகாஷ் சிங் பாதலின் குடும்பத்தினருக்கு சொந்தமான நிறுவனத்தை சேர்ந்த பேருந்தில் நிகழ்ந்த இந்த கொடூர சம்பவம், நாடு முழுவதும் மிகப்பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
 
உயிரிழந்த சிறுமியின் குடும்பத்துக்கு ரூ.20 லட்சம் நிதி, அவரது தாய்க்கு இலவச சிகிச்சை மற்றும் அரசு வேலை வழங்கப்படும் என்று அரசு அறிவித்தது. இந்த வழக்கை விசாரிக்க சிறப்பு நீதிமன்றம் அமைக்கப்படும் என்றும் கூறியது.
 
இந்நிலையில், உறவினர்கள், சம்பந்தப்பட்ட பேருந்தின் உரிமத்தை ரத்து செய்து, அதன் உரிமையாளரான துணை முதலமைச்சர் சுக்பிர் பாதலை கைது செய்ய வேண்டும் என்று வலியுறுத்தினர். அதுவரை சிறுமியின் உடலை வாங்கமாட்டோம் எனக்கூறி தொடர்ந்து போராட்டம் நடத்தி வந்தனர்.
 
அவர்களுக்கு ஆதரவாக மாநில காங்கிரஸ் மற்றும் ஆம் ஆத்மி கட்சியினர் மற்றும் சமூக தொண்டு நிறுவனங்கள் போராட்டம் நடத்தி வந்தன. எனினும் இந்த விவகாரத்தில் சுமுக முடிவை ஏற்படுத்தும் வகையில், சிறுமியின் தந்தையிடம் அரசு அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தி வந்தனர்.
 
இந்நிலையில், மாநில அரசு வழங்கும் நிவாரணங்களை ஏற்றுக்கொள்வதாக சிறுமியின் தந்தை அறிவித்தார்.
 
இது குறித்து செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது:-
 
இந்த சம்பவத்தில் எங்களின் கோரிக்கைகளை மாநில அரசு நிறைவேற்றியுள்ளது. அத்துடன், எனது மகளை கொன்றவர்களை தண்டிக்க உறுதியளித்துள்ளது. அவர்கள் எங்களுக்குத்தர முன்வந்துள்ள நிவாரணங்களை நாங்கள் ஏற்றுக்கொள்கிறோம். 
 
எவ்வளவு நிதியளிக்கிறார்கள் என்று என்னால் கூற முடியாது. எவ்வளவு தந்தாலும் அது எங்களுக்கு போதுமானது. எனது மகள் ஏற்கனவே இறந்து விட்டாள். மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் எனது மனைவியும் இறந்து விட்டார் என்றால் எனது வாழ்வின் பயன் இல்லாமல் போய்விடும். 
 
இந்த விவகாரத்தில் எனக்கு உதவி செய்த அனைவருக்கும் நன்றி கூறுகிறேன். இந்த பிரச்சினையில் சமரசம் செய்ய அரசு உள்பட யாரும் என்னை வற்புறுத்தவில்லை.
 
எனது மகளின் இறுதிச்சடங்குகளை மேற்கொள்ள விரும்புகிறேன். இதற்காக எவ்வித வற்புறுத்தலும் இன்றி பிரேத பரிசோதனைக்கு சம்மதிக்கிறேன். இவ்வாறு அவர் கூறினார்.
 
இதைத் தொடர்ந்து, சிங்புரா மருத்துவமனையில் வைக்கப்பட்டிருந்த சிறுமியின் உடல், பிரேத பரிசோதனைக்காக பரித்கோட்டில் உள்ள குரு கோபிந்த் சிங் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு எடுத்துச்செல்லப்பட்டது.
 
சிறுமியின் குடும்பத்துக்கு மாவட்ட நிர்வாகம் சார்பில் ரூ.24 லட்சம், பஞ்சாப் எஸ்.சி. பி.சி. ஆணையம் சார்பில் ரூ.6 லட்சம் மற்றும் சிறுமியின் தாய்க்கு அரசு வேலை போன்ற நிவாரணங்களை அறிவித்திருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.